ஏழைகளின் கைகளுக்கு பணத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நாங்கள் எத்தனை முறை வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்கவே மறுக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
கொரோனா வைரஸ் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். ஊடரங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் படும் துன்பங்கள் குறித்து அவ்வப்போது மத்திய அரசுக்கு யோசனையையும், அவ்வப்போது விமர்சித்தும் வருகிறார் ப. சிதம்பரம். இந்நிலையில் ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைக் கொண்டு சேர்ப்பதுதான் அரசின் முதல் கடமை என்று ப.சிதம்பரம் இன்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ வருமானமோ கிடையாது. அரசின் முதல் கடமை ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதுதான். இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும். எத்தனை முறை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்கவே மறுக்கிறது. இதைச் செய்யாத வரை இந்த அரசு ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானமில்லாத அரசாகவே கருத வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.