‘’வெறும் 14 மணிநேரம் மக்கள் ஊரடங்கு உத்தரவு மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாது. தயவுசெய்து நடைமுறையை புரிந்து கொள்ளுங்கள்’’ என ரஜினிகாந்த்துக்கு திமுக எம்பி செந்தில்குமார் பதிலளித்துள்ளார்.

’’கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது கட்டத்தில் உள்ளது. அது மூன்றாவது கட்டத்திற்கு போய்விடக்கூடாது. கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் அது பரவாமல் இருந்தாலே மூன்றாவது கட்டத்திற்கு பரவாமல் தவிர்க்க முடியும். அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதே போல் தான் இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் 2வது கட்டத்தில் இருந்த போது அந்நாட்டு அரசு மக்களை ஊரடங்கு உத்தரவில் பங்கேற்கும் படி அழைப்பு விடுத்தது. ஆனால் அவர்கள் அதை முக்கியமானதாக கருதாமல் உதாசீனப்படுத்திவிட்டனர். அதனால் தான் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானது.


“அப்படி ஒரு நிலைமை இந்தியாவிற்கு வரக்கூடாது. அதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரும் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை பிரதமர் மோடி அவர்கள் கூறியது போல, மனதார பாராட்டுவோம்”என ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு இருந்தார். 

அதற்கு பதிலளித்துள்ள திமுக எம்.பி., செந்தில்குமார், ‘’ரஜினிகாந்த் சார், வெறும் 14 மணிநேரம் மக்கள் ஊரடங்கு உத்தரவு மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாது. தயவுசெய்து நடைமுறையை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கோட்பாட்டை உறுதிப்படுத்த போதுமான அறிவியல் ஆதாரங்களுடன் விஷயங்களை நிரூபிக்க முடியாதவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற வேண்டாம்’’ எனத் தெரிவித்துள்ளார். செந்திலில் இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ள ஒருவர் ‘’வேற என்ன பண்ணலாம் சார்? வீட்டு வாசல்ல NO Corona கோலம் போட்டா வராம தடுத்தரலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து No CAA, No NPR எனக் கோலம்போட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.