நயினார் நாகேந்திரனால் அதிமுக-பாஜக கூட்டணியில் குண்டு.. ஈபிஎஸ்ஸை அவசரமாக கூல் செய்த அண்ணாமலை.. பின்னணி என்ன?
தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும்கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுவதில்லை.
நயினார் நாகேந்திரன் அதிமுக பற்றி பேசிய ‘ஆண்மை’ பேச்சு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்.
அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக துணை தலைவரும் சட்டப்பேரவை பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையானது. அவர் பேசும்போது, “தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும்கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுவதில்லை. பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே” என நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு சர்ச்சையான நிலையில், அதிமுகவினர் கொந்தளித்தனர். ஆண்மை இருந்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனியாகப் போட்டியிட்டு ஆண்மையை நிரூபியுங்கள் என்று சமூக ஊடகங்களில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தனர். அதிமுக நிர்வாகிகளும் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்திருந்தனர். இதனையத்து தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தனர். என்றாலும் அதிமுகவினர் நயினார் நாகேந்திரனை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் ‘ஆண்மை பேச்சு’ தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை கூறுகையில், “நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைப்பாடு கிடையாது. நயினார் நாகேந்திரனுக்கே அதில் உடன்பாடு கிடையாது. அவர் சொல்ல வந்த விஷயம் வேறு. ஆனால், வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த சலனமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். 2019 முதலே இக்கட்டான சூழ்நிலைகளில் பாஜக அரசுக்கு அதிமுக துணையாக நின்றுள்ளது.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில், கூட்டணிக்குக் குண்டு வைக்கும் வகையில் நயினார் நாகேந்திரனின் பேச்சு அமைந்ததால், அதிமுகவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது கீழ்மட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நயினார் நாகேந்திரனின் பேச்சு தொடர்ந்து பெரிதான நிலையில், இது கீழ்மட்ட அளவில், தேர்தலுக்கு அதிமுக நிர்வாகிகளுக்கு இணைந்து பணியாற்றுவதில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், அவசரமாக எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்புகொண்டு, வருத்தம் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. இதன்மூலம், அதிமுகவினர் கூல் ஆவார்கள் என்பது பாஜக தலைவர் அண்ணாமலையின் கணக்கு.