மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளோடு பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கோர்த்துவிட்டு முரசொலி கார்ட்டூன் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகையை பறித்ததாக கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பின்னரே பல பெண்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது சில வீடியோக்கள் மூலம் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் திருநாவுக்கரசு முக்கிய குற்றவாளியாகவும், அதைத் தொடர்ந்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அரசியல் தலையீடு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில் வரும் பிப்ரவரி 24ம் தேதிஜெயலலிதாவின் பிறந்த நாலை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பை நையாண்டி செய்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கார்டூன் வெளியிட்டுள்ளது. 

அதில், ‘’அந்துமணி:- பாத்தியாடி சிந்து; ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்போவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்து இருக்கிறாரே’’

சிந்துமணி:- ‘’பார்த்தேண்டி அந்து; இதற்கான விழாவை பொள்ளாச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலும் நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லையடி அந்து..’’எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தையும், ஜெயலலிதா பிறந்த நாளில் அறிவிக்கப்பட்ட புதிய தினத்தையும் முடிச்சுப்போட்டு விமர்சித்துள்ளது முரசொலி.