சமூக செயற்பாட்டாளர் முகிலனைப் பலவீனப்படுத்தும் வகையில் அவரைக் பாலியல் புகார்ப் பிரிவில் கைது செய்து விசாரிக்கபோலீஸார் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது,

நாமக்கல் மாவட்டத்தை  சேர்ந்த முருகேசன்  என்பவரின் மகள் ராஜேஸ்வரி (வயது 37), கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் மனு அளித்திருந்தார்.அதற்கு  முன்னரே முகிலன் தன்னை ஏமாற்றி பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தியதாக தந்து முகநூல் பக்கத்தில் பக்கம் பக்கமாக எழுதிவந்தார்.

அவரது பதிவில் எந்தவித மாற்றமும் செய்யாமல் பிரசுரித்த நமது இணையதளத்தைத் தொடர்புகொண்ட அவர் முதலில் பதிவை நீக்கச்சொன்னார். அடுத்து புகைப்படங்களையாவது நீக்குங்கள் என்று தொடர்ந்து நச்சரித்து வந்தார்.

அந்நிலையில் முகிலன் மீது போலீஸில் புகார் கொடுத்த அவர் அதில், முகிலன் செய்து வந்த சமூக சேவையால்  ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து சமூக சேவையாற்றி வந்தேன். கடந்த 26.2.2017 அன்று ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடு வாசலில்  நடைபெற்ற போராட்டத்தில் அவருடன் பங்கேற்றேன். பின்னர் 27-ந் தேதி  நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள காம்ப்ளக்சில் இருவரும் தங்கினோம். அப்போது முகிலன், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி, என்னை  கட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறவு கொண்டார். இதுபோன்று பலமுறை என்னை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வமலர் மற்றும் போலீசார் முகிலன் மீது 417 (திருமணம் செய்து கொள்வதாக உத்தர வாதம் அளித்து ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம் செய்தல்) மற்றும் பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்தனர். இந்த வழக்கிலும் முகிலனை குளித்தலை போலீசார் தேடி வந்தனர். 

இந்த நிலையில் மாயமான முகிலன் மீட்கப்பட்டுள்ளதால் அவரை கற்பழிப்பு வழக்கில் கைது செய்ய குளித்தலை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக  சென்னை போலீசாருக்கு வாரண்டு அனுப்பி, அங்கேயே அவரை கைது செய்யவும் அல்லது முகிலனை குளித்தலை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி கைது செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு ஆதரவாக மற்ற அரசியல் கட்சியினரோ சமூக ஆர்வலர்களோ குரல் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அவசரக் கைது நடப்பதாகத் தெரிகிறது.