கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேரடியாக உரையாடும் விதமாக மன் கி பாத் என்ற 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் என்கிற 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தனது பேச்சில் குறிப்பிட்டார். தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு குறித்து கூறிய பிரதமர் மோடி ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தங்கள் சொந்த உயிருடன் விளையாடுகிறார்கள் என்றார். கட்டுப்பாடுகள் மட்டுமே, இப்போதைக்கு நமக்கு இருக்கும் தீர்வு என்றும் அதை பலர் இன்னும் மீறுவது வருந்தத்தக்கது என்று கூறினார். உலகில் உள்ள பல மக்கள் இதே தவறுகளை தான் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

மனித குலத்திற்கே சவாலாக விளங்கும் கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம் என முழு நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் மக்கள் பயப்பட வேண்டாம் என்று கூறிய மோடி,  2020 செவிலியர்களுக்கான ஆண்டாக அமைந்து விட்டது, அவர்களின் சேவைக்கு ஈடு இணையே இல்லை என்று பேசினார்.