Asianet News TamilAsianet News Tamil

“கோடிகளில் புரள வைத்தவருக்கு ஒத்த மாலை போடாத அவலம்....” அது நிச்சயம் எம்.என் - க்காக வருந்தும்...

Ministers who refused to pay tribute to Nataraja



உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புதிய பார்வை இதழின் ஆசிரியரும், தமிழியக்கப் புரவலருமான நடராஜன் இன்று காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். அவரது உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் துரைமுருகன், பொன்முடி ஆகியோருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால் அவரால் “இதே வீட்டுக்கு சைரன் கார் இல்லாமல் சாதாரண காரிலும் ஆட்டோவிலுமாக வந்து நடராஜனைப் பார்த்து பதவி பெற்றுப் போனவர்கள் எத்தனையோ பேர். ஆனால் நேற்று இரவு வரை அவர்களில் யாரும் நடராஜனின் உடலை எட்டிப் பார்க்கவில்லை. காரணம், நடராஜன் உயிரோடு இருக்கும்போது வாங்கிக் கொடுத்த பதவி போய்விடுமோ என்ற பயம்தான் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதோ அந்த பதிவு... விளார் கிராமம் வழிமேல் விழி வைத்திருந்தது! ஆளுங்கட்சியினர் சார்பில் ஒரு மலர் வளையமாவது வந்து சேருமா? என்று. ம்ஹூம்! அதிகார மையம் சார்பாக ஒரு புறா விடு இரங்கல் தூது கூட இல்லை. அ.தி.மு.க.வின் ஆட்சியையும், அமைச்சர்களையும் உருவாக்கிய நடராஜனின் பூத உடல் எந்த அதிகார தோரணையுமின்றி அவரது முள்ளிவாய்க்கால் முற்றம் நோக்கி நிரந்தர குடியேற்றத்துக்காக நகர்கிறது. 

இங்கே நிறுத்திவிட்டு, சில வருடங்கள் பின் செல்வோம்!
நடராஜனின் பாதியான அவரது மனைவி சசிகலா ஜெயலலிதாவின் தோழியாக, சகோதரியாக போயஸ் கார்டனே கதி என்று இருந்த காலமெல்லாம் நடராஜன் தனி மரமாகத்தான் வாழ்ந்தார். சசிகலா போயஸ்கார்டனில் குடிபுகுந்த பின்னரும் கூட அவ்வப்போது நடராஜனை சந்தித்து குடும்ப விஷயங்களை ஆலோசிக்கும் நிலை தொடர்ந்தது. ஆனால் ஜெயலலிதா திடீரென கட்டுப்பாடுகளை விதிக்க, நடராஜனுடனான பந்தத்தை வெகுவாய் துண்டித்தார் சசிகலா. போயஸ்கார்டனுக்கு நடராஜன் வருவதையும் ஜெயலலிதா தடுத்தார். சில காலங்களுக்கு முன் ‘சசிகலா நடராஜன்’ எனும் தன் பெயரை கெசட்டிலேயே மாற்றி, நடராஜனை தன் பெயரிலிருந்தும் கூட விடுவித்துக் கொண்டார் சசி. எல்லாமே  ஜெயலலிதாவுக்காகத்தான்! என்றார்கள். 

சில வருடங்களுக்கு முன் சசிகலா, இளவரசி உள்ளிட்ட சசி குடும்பத்தை கார்டனிலிருந்தும், கட்சியிலிருந்தும் வெளியேற்றினார் ஜெ., அப்போது கூட சசிகலா தன் கணவர் நடராஜனை சென்று சேரவில்லை. இது ஜெ.,வின் கவனத்தை வெகுவாய் ஈர்த்தது. 
ஜெயலலிதா இருக்கும் போது என்றில்லை, ஜெ., மறைந்த பிறகும் கூட நடராஜனுடன் இணைவதை சசி விரும்பவில்லை. நடராஜனேதான் வலிய வந்து கட்சி ரீதியாக சில காய் நகர்த்தல்களை செய்தாரே ஒழிய சசி அவரை பெரிதாய் எதிர்பார்க்கவில்லை. இதை மறுப்பவர்களும் உண்டு. ‘இல்லை, ஜெ., மற்றும் சசிக்காக அத்தனை அரசியல் பரிபாலனங்களையும் திரைமறைவில் செய்து கொடுத்தது நடராஜன் தான்.’ என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் வெளிப்படையாக நடராஜனை சசிகலா ஏற்றுக் கொள்ளவேயில்லை கடைசி வரை. ஜெயலலிதா இல்லாத நிலையிலும் தன் கணவருடன் இணையாதவர் சசி. 

ஆனால் அதே வேளையில் ‘நடராஜனுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.’ என்று கூறியும் கூட அ.தி.மு.க.வின் அத்தனை பெரும்புள்ளிகளும் அவரை சென்று சந்திப்பதை வழக்கமாகவே வைத்திருந்தனர். அவரால் பதவி, அதிகாரம் என்று பலன் பெற்றவர்கள் ஏராளம், ஏராளம். சசி வெளிப்படையாக பர்ஷனல் விஷயங்களை நடராஜனுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் கூட அரசியல் ரீதியில் அவரது சாணக்கியத்தனத்தை எதிர்பார்க்கத்தான் செய்தார். நடராஜன் ஸ்கேன் செய்துவிட்டு ‘ஓ.கே.’ அடித்த நபர்களுக்கு சசிகலா வாயிலாக அ.தி.மு.க.வில் பெரும் வாய்ப்புகளும், அதிகாரங்களும், வசதிகளும் கிடைத்தன. 

இன்று அமைச்சரவையிலும், கழகத்திலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் பலரும். இதற்கு முன் அமைச்சர்களாகவும், மாவட்ட செயலாளர்களாகவும், வாரிய தலைவர்களாகவும் ஜபர்தஸ்து காட்டிய பல நூறு பேர் நடராஜனின் ஆசீர்வாதத்தினால் வளர்ந்தவர்களே. பலர் கோடி கோடியாய் சம்பாதித்து செட்டிலாகியிருப்பதெல்லாம் நடராஜன் ஒரு ரூபாய் செலவு செய்து போன் செய்து ‘இவரு ஓ.கே.ம்மா’ என்று சொன்னதன் விளைவே. 

ஆனால் அவர்களில் எவரும் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை. நடராஜனுக்கு இறுதி அஞ்சலி ஏன் செலுத்தவில்லை என்பதற்கு மிக அலட்சியமாக அமைச்சர் ஜெயக்குமார் பதில் சொல்லியிருக்கிறார். வெளிப்படையாய் இப்படி பேசிவிட்டாலும் அமைச்சர்களின் உள் மனதில் மனசாட்சி என்று ஒன்று ஒட்டியிருந்தால் அது நிச்சயம் எம்.என் - க்காக வருந்தும். 

’எதிரியாய் இருந்தாலும் துக்கத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்’ எனும் பண்பில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு இருக்கும் பொறுப்பும், நாகரிகமும் கூட நடராஜனால் வாழ்க்கை பெற்றோருக்கு இல்லாமல் போனது அசிங்கம். நடராஜனுக்கு அஞ்சலி செலுத்த வருகையில் எங்கே சசிகலாவை பார்க்க வேண்டி வந்துவிடுமோ! என்று அவர்கள் நினைத்திருப்பார்களேயானால், நேற்று காலையில் மருத்துவமனையிலேயே ஸ்பெஷல் டைம் போட்டு நடராஜனுக்கு இறுதி மரியாதை செய்திருக்கலாம். 

இப்போது மீண்டும் விளார் கிராமத்துக்கு வாருங்கள். நடராஜனின் பூத உடல் முள்ளிவாய்க்கால் முற்றம் நோக்கி அடிப்படை அதிகார தோரணை கூட இன்றி நகர்வதில் தார்மீக நியாயம் இருக்கிறதா என்ன?!

Video Top Stories