ரஜினியின் இரண்டாவது மகள் திருமணத்திற்கு பெரியார் தான் காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ  தெரிவித்துள்ளார் .  இதேபோல் பெண்கள் ஊராட்சி தலைவர்களாக வருவதற்கும் காரணம் பெரியார் தான் என அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடியாக தெரிவித்துள்ளார் . பெரியார் குறித்து  விமர்சித்த நடிகர் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜு இவ்வாறு கூறியுள்ளார்.   கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்  தந்தை பெரியார் 1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் ராமர்,  சீதை  நிர்வாணமாக இருப்பது போன்ற உருவப்படங்களை  கொண்டு சென்றார் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . 

பெரியாருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரசியல் நோக்கத்தோடு ரஜினி திட்டமிட்டு பொய்யான தகவல்களை கூறுகிறார்  என கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்,  திராவிடர் கழகத்தினர் ,   திராவிட முன்னேற்றக் கழகம் , மற்றும்  அதிமுகவினர் ஒரு சேர நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து வருகின்றனர்.   இந்நிலையில் பெரியார் குறித்து ரஜினி வைத்த  விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜு ,  இன்று பெண்கள் பலர் ஊராட்சித் தலைவராக அமர்ந்திருக்கிறார்கள்  என்றால் அதற்குக் காரணம் பெரியார் தான் , அவர் பெண்களுக்காக முன்னெடுத்த போராட்டங்கள்தான்  இதை பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் எப்போதும்  மறக்கக்கூடாது என்றார் .

அதேபோல் ராஜீவ்காந்தியை கிராமத்தில் இருப்பவர்கள் மறக்கக்கூடாது , ஏனென்றால் கிராமராஜ்யத்தை  கொண்டுவந்தவர் ராஜீவ் காந்திதான் .இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர்களில்  கருணாநிதிக்கும் பங்கு உண்டு .  அதை என்னால் மறுக்க முடியாது எனக் கூறினார் .  ரஜினி , பெரியார் குறித்து விமர்சித்ததற்கு பதில் அளித்த அவர் ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி இரண்டாவது திருமணம் செய்து வைத்தார்.? இது போன்ற திருமணங்களை அரசு அங்கிகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி அந்த உரிமையை பெற்று தந்தவர்  பெரியார் தான் என்றார்,  இதை யாராலும் மறுக்க முடியாது என்றார்.   பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற அமைச்சர்  எதை பேசுவதற்கு முன்னும் நடிகர் ரஜினி நிதானமாக ஆராய்ந்து பேச வேண்டும் என அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு ரஜினிக்கு அறிவுரை வழங்கினார்.