2021 சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் ஓர் ஓட்டுகூட திமுகவுக்கு விழாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  
சென்னை திருவல்லிக்கேணி வெலிங்டன் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். “குடியுரிமைத் திருத்த சட்ட விவகாரத்தில் திமுக உள் ஒன்று வைத்துகொண்டு வெளி ஒன்று பேசி, இஸ்லாமியர்களின் நண்பர்போல் நடிக்கிறது. ஊழலின் உற்றுக்கண்ணே திமுகதான். இதேபோல குடிப்பதற்கும் ஊழல் செய்வதற்கும் அராஜகம் செய்ய கற்றுக்கொடுத்த கட்சியும் திமுகதான். டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக அறிவித்ததில் திமுக அரசியல் செய்கிறது. இதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனம் இல்லை. இதனால் தவறான கருத்துகளை திமுக முன்வைக்கிறது. 
இதற்கான விலையை 2021 தேர்தலில் திமுக அறுவடை செய்யும். டெல்டா மாவட்டங்களில் ஓர் ஓட்டுகூட திமுகவுக்கு விழாது.  பெரம்பலூர், கரூர் போன்ற மாவட்டங்கள் தொழில் வளம் நிறைந்த மாவட்டங்கள் என்பதால்தான் சிறப்பு வேளாண்  மண்டல பட்டியலில் விடுபட்டன. 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியிலேயே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழர்களின் உணர்வு. அதுதான் அரசின் நிலைபாடும்கூட. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு மாநில அரசு நிர்பந்தம் கொடுக்க முடியாது. ஆனாலும், நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். இந்த விஷயத்தில் திமுகதான் மாறுபட்ட நிலைபாட்டை எடுக்கிறது” என ஜெயக்குமார் தெரிவித்தார்.