தலையில் விக் வைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவன் மீது மனைவி புகார் கொடுத்துள்ளார். பெண்ணின் புகாரின் பேரில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது 2 பிரிவின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். 

ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கவிதா (27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த  ராஜசேகர் (29) என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு மற்றும் அடிக்கடி தகராறு இருந்து வந்த நிலையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கவிதா தனது கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கவிதா கூறியிருப்பதாவது: 

கடந்த 2015ஆம் ஆண்டு மேட்ரிமோனி மூலம் இரு வீட்டுப் பெரியவர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது கணவர் ராஜசேகர் மற்றும் அவரது தாய், தந்தை  மற்றும் ராஜசேகரின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து 50 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட எனது பெற்றோர் கார், 50 சவரன் நகையுடன், 2 லட்சம் பணம் கொடுத்து திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் கணவருக்கு உடல் உறவு வைத்துக் கொள்வதில் ஈடுபாடு  இல்லை. ஆனால்  என்னுடைய கட்டாயத்தின் பேரில் அவர் ஒரே ஒரு முறை உறவு வைத்துக் கொண்டார். அப்போதுதான் என் கணவருக்கு தலையில் முடி இல்லை என்று எனக்கு தெரிந்தது. 

அவர் தலையில் விக் வைத்துக் கொண்டு என்னையும் எனது குடும்பத்தையும் ஏமாற்றியது தெரிய வந்தது. இதனால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். என்னை ஏமாற்றியது குறித்து கணவரிடம் கேட்டதற்கு அவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார். மேலும் எனது திருமணத்திற்கு கொடுத்த 50 சவரன் நகை மற்றும் அன்பளிப்பாக வந்த 8 சவரன் நகை அனைத்தையும்  வாங்கி வைத்துக்கொண்டு வங்கியில் வைத்துள்ளதாக பொய் கூறுகிறார். இதை தட்டிக்கேட்ட என்னை அடித்து துன்புறுத்துகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில்  11-1- 2011 அன்று கணவர் ராஜசேகர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.