தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனின் பதவி பறிபோக நானும் ஒரு காரணம் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் அதிரடியாக கூறியுள்ளார். 

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கடந்த வாரம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து, மணிகண்டனிடமிருந்த தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதலாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. அவரது பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக விசாரித்த போது கேபிள் டிவி தலைவராக செயல்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியை தூக்கிவிட்டு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உடுமலை ராதாகிருஷ்னனை விமர்சித்து பேட்டியளித்த நிலையில் அமைச்சர் மணிகண்டன் பதவியை முதல்வர் எடப்பாடி அதிரடியாக பறித்தார். 

இதனிடையே, மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டத்தில் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஒரு வகையில் சந்தோஷம் என்றாலும், அதைவிட திருப்தியாக இருப்பவர் நடிகரும், திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ். இவர் ஏற்கனவே பலமுறை அமைச்சர் மணிகண்டன் மீது ஊடகங்களிடமும், முதல் அமைச்சரிடம் புகார் கூறியிருக்கிறார்.

கடந்த ஓராண்டாக எனது சொந்த தொகுதியான திருவாடானைக்கு என்னால் செல்ல முடியவில்லை. இதற்கு அமைச்சர் மணிகண்டன்தான் காரணம். அவர் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் செயல்படுகிறார். தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களுக்குகூட எனக்கு அழைப்பு இல்லை என்று ஆதாங்கத்தை அவ்வப்போது கொட்டி தீர்த்து வந்தார். 

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் சமீபத்தில் நீக்கப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகரும், திருவாடனை தொகுதி  எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணம். மணிகண்டன் பற்றி முதன்முதலில் முதல்வரிடம் புகார் கொடுத்தது நான் தான் என்று கூறினார். தற்போது ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்றும் கருணாஸ் கூறினார்.