ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் 8 எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்தி சென்று சொகுசு விடுதியில் தக்கவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், மத்தியப்பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு 231 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார். ஒரு ஆண்டுக்கு மேலாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் மத்திய பிரதேச அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க, ஒரு எம்.எல்.ஏ.வுக்கு 35 கோடி பேரம் பேசி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். முதல் கட்டத்தில் முன்பணமாக 5 கோடி, 2-வது கட்டமாக மாநிலங்களவைத் தேர்தலின்போது கட்சி மாறி வாக்களித்த பின், 3-வது கட்டமாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின் ஆட்சி கலைக்கப்பட்டதும் மீத தொகையை அளிப்பதாக இவர்கள் வெளிப்படையாக பேசி வருவதாக தெரிவித்தார். இதுவொன்றும் கர்நாடகா அல்ல மத்தியப் பிரதேசம். எங்களுடைய எம்எல்ஏ.க்கள் யாரும் விலை போக மாட்டார்கள் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர். 

இந்நிலையில், ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மத்தியப்பிரதேச பாஜக தலைவர்கள் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கடத்தி சென்று சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 107 உள்ளன. பெரும்பான்மைக்கு 116 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு இன்னும் 9 எம்.எல்.ஏ க்கள் ஆதரவு இருந்தால் மத்தியப்பிரதேசத்தில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது. இதனால், மத்தியப்பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில பாஜக தலைவர் கூறுகையில்;- எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதற்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.