கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க இதைத் தவிர மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரல் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கொரோனா வைரஸை, விளையாட்டாக நினைக்காதீர்கள். அது யாரையும் விட்டுவைப்பதில்லை, நம்மை தாக்காது என்று யாரும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். நோயாளிகளுக்கு மட்டும்தான் சமூக விலகல் என்று சிலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சமூக விலகல் என்பது அனைத்து குடிமக்களுக்குமானது.


எனவே, இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்படும். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு என்பது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக தான். இந்த லாக்டவுன், என்பது ஜனதா ஊரடங்கு மாதிரி இல்லை. அதைவிட கடுமையாக பின்பற்றப்படும். அடுத்த 21 நாட்களுக்கு இந்த லாக்டவுன் அமலில் இருக்கும்.” என்று தெரிவித்தார். 
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “#CoronaVirus-ன் கொடூரம் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்திருக்கும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நமக்கு நாமே இதனைச் சட்டமாக்கிக் கொள்வோம்! நோய் பரவாமல் தடுக்க இதைத் தவிர மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்!” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.