தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் பிறந்தநாள் ஜனவரி 30ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. 2014 ம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தீவிர அரசியலில் அழகிரி ஈடுபடவில்லை. கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே மீண்டும் திமுகவில் இணைய அவர் முயற்சித்ததாகவும் ஆனால் அதற்கு தற்போதைய தலைமை முட்டுக்கட்டை போட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

கருணாநிதி மறைந்த பிறகு அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணி நடத்தினார். அது பெரிய அளவில் பலன்தராததால் அதன்பிறகு அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார். தனது ஆதரவாளர்களின் இல்ல விழாக்களில் மட்டும் அவ்வப்போது கலந்து கொண்டு வருகிறார். தீவிர அரசியலில் இருந்து விலகினாலும் ஒவ்வொரு வருடமும் அழகிரியின் பிறந்தநாளை மட்டும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

 

பிரம்மாண்ட விழாக்கள் நடைபெறாவிட்டாலும் அவரது பிறந்தநாளுக்கு மதுரை மாவட்டத்தை சுற்றி ஒட்டப்படும் போஸ்டர்கள் திமுகவில் ஒருவித அதிர்வலைகளை உருவாக்கும். வழக்கம் போல அழகிரியின் பிறந்தநாளான இன்றும் மதுரையில் போஸ்டர்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. அவற்றில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள் அழகிரியை மீண்டும் அரசியலுக்கு அவரது ஆதரவாளர்கள் அழைப்பதாகவே அமைந்துள்ளது. ‘கழகத்தைக் காக்க வா! தமிழகத்தை மீட்க வா! தலைவா!’, ‘எதையும் தாங்கும் இதயம் – அறிஞர் அண்ணா. இதையும் தாங்கும் இமயம் நீயே அண்ணா!’, ‘அஞ்சா நெஞ்சரே! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்.. உன்தன்னோடு உற்றோமே யாவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!’ என்றும் கூறப்பட்டுள்ளன.

இவை மட்டுமில்லாது, ‘நிஜம் வெல்லும்!’, ‘ராசியானவரே! மாற்றம் 2021-ல் மறுபடியும் மாறும், ‘என்றும் கழகத்திற்கு எல்லாமே எங்க அண்ணன்தான்!’, ‘மலர் பாதையா? முள் படுக்கையா? எதுவாகினும் அண்ணன் வழியில்.. இந்த வழி ஒன்றுதான் என் வழி போன்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இவை திமுக தலைமைக்கு எரிச்சலையும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தையும் விளைவிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read:  'கருணாநிதி ஒரு தீவிரவாதி'..! தம்பிகளிடம் பகீர் கிளப்பிய சீமான்..!