காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகியதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை என தமிழக காங்கிஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கட்சியில் முக்கிய பதவி வழங்காததால் கடந்த சில மாதங்களாகவே தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களாக நடிகை குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது. இதை மறுத்து வந்த நிலையில் நடிகை குஷ்பு நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென அவசரம் அவசரமாக பாஜகவில் இணைய டெல்லி புறப்பட்டு சென்றார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து குஷ்பு நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது. 

இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனிகாந்திக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதியிருந்தார். அதில், கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னைப் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியின் உயர்பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் தெரியாதவர்கள் ஒடுக்குகின்றனர். பணம் புகழை பெறுவதற்காக நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவதால் கட்சிக்குள் எந்த இழப்பும் இல்லை. பாஜகவில் சேர குஷ்புவை யாரும் அழைக்கவில்லை; தானாக போய் பாஜகவில் சேருகிறார். காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாக பார்க்கவில்லை. கட்சியிலும் அவர் நடிகையாகவே இருந்தார்.  காங்கிரஸில் அவர் தாமரை இலை மேல் தண்ணீர் போலதான் இருந்தார் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.