இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ’நாளை நடைபெறும் ‘பொய் பெட்டி’நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர், அண்ணன் நாஞ்சில் சம்பத். ஆதிக்கவாதிகளையும், ஊழலை மறைக்கத் தமிழகத்தை அடிமை சாசனம் எழுதிக்கொடுக்க முயலும் ஆட்சியாளர்களையும் கதறவைக்க வருகிறார். 

சில ஆதிக்க பாசிச சக்திகளுக்கும், அவர்களின் கால்பிடித்து அடிமை சேவகம் செய்யும் ஆட்சியாளர்களும், சமூகநீதிக் கொள்கையால் தமிழ் நிலத்தை தலைநிமிர வைத்த திராவிட இயக்கத்தை பற்றியும், அதன் தனிப்பெரும் தலைவர்களை பற்றியும், ஆதாரங்களே இல்லாத குற்றச்சாட்டுகள், அடிப்படையே இல்லாத அவதூறுகளைப்பரப்பி அரசியல் லாபம் அடைய விரும்புகின்றனர். 

இந்த நிலையில், உண்மை அரசியல் வரலாற்றையும், ஆதிக்கத்தை ஒழித்த கழகத்தின் கொள்கையையும், இன்றைய இணையத் தலைமுறை இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் முன்பாக வெளிச்சமிட்டு காட்ட கழக இளைஞர்கள் அணியால் முன்னெடுக்கப்படும் பொய் பெட்டி நிகழ்ச்சியை நடத்த இம்மாதம் சிறப்பு அழைப்பாராக நாஞ்சில் சம்பத் பங்கேற்கிறார் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ம.தி.மு.க-வில் வைகோவின் வலதுகரமாகவும் பிரசார பீரங்கியாகவும் இருந்தவர். பின்னர் அ.தி.மு.க-வில் இணைந்தவர், தினகரன் அ.ம.மு.க தொடங்கியதும் அவரது கூடாரத்துக்குச் சென்றார். பின்னர் அ.ம.மு.க-வில் இருந்து விலகி இப்போது இலக்கிய கூட்டம், பட்டிமன்றம் எனத் தமிழகம் முழுவதும் சுற்றிவருகிறார்.

 

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு இடையிலும்  சினிமாவில் பிஸியாக நடித்து வந்த அவரை உதயநிதி ஸ்டாலின் தங்களது கட்சியின் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து கொள்கை விளக்க வீடியோவை வெளியிட நாஞ்சில் சம்பத்தை அழைத்து வந்துள்ளார். 

 

இந்நிலையில், அவர் திமுகவில் ஐக்கியமாவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வைகோ திமுக கூட்டணியில் இருக்கும்போது நாஞ்சில் சம்பத் அக்கட்சியில் இணைவது சாத்தியமா என ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் சாத்தியம் நிச்சயம் என்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நாஞ்சில் சம்பத் முன்பு பேசிய ஒரே பஞ்ச். ’துப்பினால்கூட துடைத்துக் கொள்வேன்'.