அடுத்து நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், திமுக தனித்து போட்டியிட வேண்டும். எத்தனை நாள் தான்  காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்று கே.என் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.  

தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்டித்தும் சீராக குடிநீர் வழங்க கோரியும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட திமுக. சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். இந்த பிரமாண்ட போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று முன்பே தெரிந்திருந்தும் குடிநீர் பிரச்சனைக்கு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து தள்ளினார்.

மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் திருச்சியில் திமுக தனித்து போட்டியிட வேண்டும், தனித்து போட்டி அல்லது கூடுதல் இடங்களில் போட்டி என்ற கோரிக்கையை தலைமையிடம் வலியுறுத்துவேன், இனி எத்தனை நாள் தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்று கூறினார்.