குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து தமிழக சட்டசபையில் திமுக விடுத்த தீர்மான கோரிக்கையை ஏற்காததால், எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

திமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் அபூபக்கர், மஜக தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த கருணாஸ் உள்ளிட்டோர் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ‘’தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அரசு செயல்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துளோம்’’ எனத் தெரிவித்தார்.  குடியுரிமை திருத்தச் சட்ட விஷயத்தில் கருணாஸ் பேசும் போது, அடிக்கடி, மதச்சார்பற்ற அம்மாவின் அஇஅதிமுக ஆட்சியில்..." என்றே குறிப்பிட்டார்.

அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸின் இந்த அணுகுமுறை அவரது குணத்தில் மட்டுமல்ல ஆடையிலும் வெளிப்பட்டது. நடிகராக இருந்து திடீர் அரசியல்வாதியாக உருமாறிய கருணாஸ் திருவாடானையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் வெள்ளை வேட்டி - சட்டை சகிதம் வலம் வந்தார். ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டசபைக்கு வந்த அவரிடம் ஒயிட் அண்டு ஒயிட் மிஸ்ஸிங். முழுக்கை சட்டையை இன் செய்து கொண்டு, பளிச் முகத்துடன், ஷூ அணிந்து ஒரு கார்பரேட் நிறுவன அதிகாரி போல் புது தெம்புடன் வந்திருந்தார்.

இன்று சட்டசபைக்கு வந்திருந்த கருணாஸின் தோற்றம் அப்படியே விசிக தலைவர் திருமாவளவனை பிரதிபலித்தது. திருமாவளவனை போல மீசையை முறுக்கி, இன் செய்து கொண்டு, பாக்கெட்டில் பேனாவை செறுகியபடி, கண்ணாடி அணிந்து, மிதமான தொப்பையுடன் அப்படியே திருமாவளவனின் ஜெராக்ஸை போலவே தோற்றமளித்தார்.