நான் வரப்போறேன்னு சொல்லு, பழைய மு.க.வா வரப்போறேன்னு சொல்லு: தேறும் கலைஞர், திசைமாறுமா தமிழக அரசியல். ..
அன்று!
கருணாநிதி அதிகாலையில் எழாவிட்டால், செய்தித்தாள்களை வாசிக்காவிட்டால், அரசியலுக்கே அரசியலை செய்யாவிட்டால் அது அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான நாள். நல் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து பேராசிரியர் நாகநாதனுடன் வாக்கிங் போவதும், அறிவாலயம் வந்து அடுத்த நாள் முரசொலிக்காக உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுவதும், தன்னை விமர்சித்திருக்கும் அரசியல் தலைவர்களுக்கு மொருமொரு ஃபில்டர் காஃபி போல் சில எதிர் பதில்களை போட்டுத்தாக்குவதும் என பட்டையை கிளப்புவார். முதல்வராக இருந்தாலும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்தாலும் சரி கருணாநிதியின் தினப்படி வாழ்க்கை இப்படித்தான் ஆரம்பிக்கும்.
இன்று!
ஆனால் வயோதிக தொந்தரவுகள், தோல் நோய் பிரச்னை உள்ளிட்டவற்றால் இயலாமல் போன நிலையில் கருணாநிதி தனது நகரும் நாற்காலியில் அமர்வதென்பதே கடந்த சில மாதங்களாக ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
தேசத்தின் பல மாநில முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள சென்னை அதிர அதிர கடந்த 3_ம் தேதி நிகழ்ந்த தனது பிறந்தநாள் மற்றும் சட்டசபை பணியில் வைரவிழா நிகழ்வில் கூட அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதை நினைத்து அந்த மகிழ்ச்சி மிகு நாளிலும் கூட தொண்டர்கள் துவண்டு போனார்கள்.
இருந்தாலும் கூட ராகுல்காந்தி, நிதிஷ்குமார், யெச்சூரி போன்றோர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து அவரோடு அன்பை பகிர்ந்த நிகழ்வுகள் புகைப்படமாக வெளியானபோது சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தான் தொண்டன்.
இதற்கிடையில் துரைமுருகனும் ‘மீண்டு வருவார் என் தலைவன்’ என்று தன் முகநூலில் இட்ட பதிவில் கருணாநிதியிடம் அவர் பெயர் என்ன என்று கேட்டால் மிக சரியாக சொல்வதாகவும், அவருக்கு பிடித்த பெயர் என்னவென்று கேட்டால் அண்ணாதுரை என்று சொல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதிகப்படியான மருந்துகள், தொடர் மருத்துவம், 95ஐ நோக்கி ஓடும் வயது ஆகியவற்றால் கருணாநிதியின் நினைவாற்றல் முழுவதுமாகவே குறைந்துவிட்டது என்று சொல்லப்பட்டது. அவரால் தனது மகன் மற்றும் மகளை கூட அடையாளம் காண முடியவில்லை என்று வருத்தம் மேலிட பேசப்பட்டு வந்த நிலையில் வைரவிழா நிகழ்வுக்கு பிறகு கருணாநிதியின் உடல் நிலையில் ஆச்சரியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள் அவரது மருத்துவர்கள்.
சில வாரங்களுக்கு முன் தன்னை சந்திக்க வரும் ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை அந்நியமாகதான் பார்ப்பாராம் கருணாநிதி. ஆனால் வைரவிழா அழைப்பிதலை அவரிடம் கொடுக்க ஸ்டாலின் போனதிலிருந்து அவரிடம் மிகப்பெரிய மாறுதல் தோன்றியிருக்கிறது என்கிறார்கள். ராகுல், யெச்சூரியை மிகுந்த சிநேகத்துடனே அவர் கவனித்திருக்கிறார்.
அதையெல்லாம் தாண்டி லேட்டஸ்டாய் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது கோபாலபுர வட்டாரம். அதில் தனது பிரத்யேக அறையில், தனது வீல் சேரில் அமர்ந்து தினசரி பத்திரிக்கை ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர். கையில்லாத பனியனும், கறுத்த முகமும், தொண்டையில் மாட்டப்பட்ட குழாயுமாய் அவரை சமீப காலமாக பார்த்து பழக்கப்பட்ட தொண்டனை இந்த போட்டோ துள்ளி எழ வைத்திருக்கிறது. காரணம் கடும் சுகவீனம் வரும் முன் எப்படி காணப்பட்டாரோ அந்த தோற்றத்துக்கு மளமளவென முன்னேறியிருக்கிறார் கலைஞர்.
இந்த படம் பழைய படம் இல்லை என்பதற்கு இரண்டு விஷயங்கள் சாட்சி. ஒன்று அவது தொண்டைப் பகுதியில் காணப்படும் பேண்டேஜ் மற்றொன்று அவர் கையிலுள்ள பத்திரிக்கை காட்டும் சமீப செய்தி. அவருக்கு பின்னாலிருக்கும் சுவர் கடிகாரம் 10:05 என்று மணியை காட்ட, அவர் கையிலிருக்கும் வாட்ச் 10:00 மணியை காட்டுகிறது. ஆக ஆறேழு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து தெளிவாக தயாராகிறார் கலைஞர் என்பதை இந்த புகைப்படம் விளக்குகிறது.
பத்திரிக்கையை வாசிப்பதன் மூலம் அவரது நினைவாற்றல் நல்ல நிலைக்கு முன்னேறியிருக்கிறது என்று நிச்சயம் நம்ப முடிகிறது. பேச்சு வராவிட்டாலும் கூட அவரது எண்ணங்கள் தீவிர அரசியலை திடமாக யோசிக்கும் என்பது நிதர்சனம்.
அப்படி என்னதான் யோசிப்பார் கலைஞர்?...
”மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருக்கும் ஜெயலலிதாவுக்கு ஒருவேளை ஏதாவது எதிர்மறை முடிவுகள் நேர்ந்துவிட்டால், அந்த சூழலை பயன்படுத்தி புறவழியில் ஆட்சிக்கு வரவேண்டாமென்று சொன்னேன் உண்மைதான். ஆனால் முடங்கி மூழ்கிப்போன அரசாங்கத்தால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையை பயன்படுத்தி மக்கள் ‘தி.மு.க. உடனே வரவேண்டும்’ என்று குரல் கொடுக்கும் சூழலை உருவாக்க வேண்டாமென்றா சொன்னேன்!” என்று நிச்சயம் நோவார்.
கலைஞரின் எழுச்சி செயல்தலைவரை செயல்புயலாக்குகிறதா என்று பார்ப்போம்.