கொரோவா வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே தமிழக அரசு கட்டுப்படுத்தாததால்தான் தற்போது பிரச்னை ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை வரை வந்துவிட்டது என்று திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் திருச்சியில் ஒரு வார்டுக்கு 500 மூட்டை வீதம் 17,000 மூட்டைகள்  அரிசி வழங்கும் நிகழ்வு திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் நடைப்பெற்றது. அந்த அரிசி மூட்டைகளை மக்களுக்கு வழங்குவதற்காக திமுக வட்ட செயலாளர்களிடம் அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழங்கினார். பின்னர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசினார். 
 “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் தொடக்கம் முதலே கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்து கோரிக்கை விடுத்தோம். ஆனால், தமிழக அரசு மாநிலத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை எனக் கூறி நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. எனவேதான் தற்போது இந்தளவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை வரை வந்துவிட்டது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதியாக எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்னை ஏற்பட்டிருக்காது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டவில்லை. ஆனால், மத்திய அரசு தற்போது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க திமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” என்று கே.என். நேரு தெரிவித்தார்.