பரபரப்பான பலியல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திடுக் தகவலை வெளியிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் ரஞ்சன் கோகாய். இவர் மீது உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்தார். அதில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவரது வீட்டில் வைத்து தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.கடந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி, ரஞ்சன் கோகோய் தம்மிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அந்த பெண்,”அவர் என்னுடைய அடி வயிற்றை கட்டிப்பிடித்தார். அவரது கைகளை வைத்து என்னுடைய உடலின் அனைத்து பாகங்களை தொட்டார். அவருடைய உடலை என் மீது அழுத்தி என்னை நகரவிடாமல் செய்தார். மேலும் என்னை பிடித்துக் கொள் பிடித்துக் கொள் என்று அவர் கூறினார். நான் அங்கிருந்து தப்பி விடலாம் என்று நினைத்த போது என்னை அவர் விடவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து பதிலளித்த  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அடுத்த வாரத்தில் சில முக்கிய வழக்குகளை கையாள இருப்பதாகவும், அதனை தடுக்கும் முயற்சியாக இந்த புகாரை பார்ப்பதாக தெரிவித்திருந்தார். அத்துடன் நீதித்துறை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது எனவும் இதேநிலை தொடர்ந்தால் நேர்மையானவர்கள் நீதித்துறைக்கு வேலைக்கு வருவதற்கு தயங்குவார்கள் எனவும் கூறியிருந்தார். இதனிடையே இந்த விஷயத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் மனுவும் தாக்கல் செய்துள்ளார். அதில், அஜய் என்பவர் தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு ஜோடிக்க தன்னை அணுகியதாக கூறியுள்ளார். அத்துடன் ரஞ்சன் கோகாய்க்கு எதிராக புகார் கூற, பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க தான் மறுத்துவிட்டதாக உஸ்தவ் பெய்ன்ஸ் கூறியுள்ளார்.

புகார் கூறிய பெண்ணுக்கு நீங்கள் என்ன உறவு வேண்டும் என கேட்டதற்கு, அதனை தட்டிக்கழிக்கும் வகையில் அவர் பதில் கூறியதாக உஸ்தவ் தெரிவித்துள்ளார். ரஞ்சன் கோகாயை அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க பல்வேறு சதித்திட்டம் நடப்பதாகவும் உஸ்தவ் பென்ஸ் தெரிவித்துள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சதித்திட்டம் நடைபெறுவது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.