ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை; நான்தான் கால் விரல்களை கட்டினேன்  - வெளியானது பரபரப்பு வாக்குமூலம்..!

Jayalalithas legs were not cut
First Published Mar 8, 2018, 3:24 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை என ஜெவின் கார் ஓட்டுநர் ஐயப்பன் விசாரனை ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாட்களும் சசிகலா மட்டுமே கண்காணித்து வந்தார். அவரை யாரையும்  பார்க்கவிடவில்லை. 

அனைவரும் மருத்துவமனை சென்றுவிட்டு பார்க்காமலேயே வந்து பேட்டியளித்தனர். இதனால் பொதுமக்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்தது. மேலும் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு  அவரது கால்கள் வெட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 

ஆனால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து பொறுப்பேற்ற எடப்பாடி தலைமையிலான அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. 

அந்த விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரையும் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள விசாரணைக் கமிஷனில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடந்து வருகிறது முன்னாள் அதிகாரிகள், இந்நாள் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அவரது மரணத்தில் தொடர்புடைய அனைவரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன் விசாரணை கமிஷனில் ஆஜராகி விளக்கமளித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் இருந்தபோது பார்த்தேன் எனவும் அவருடைய பொருட்களை எடுத்து கொண்டு செல்லும் போது பார்த்தேன் எனவும் தெரிவித்தார். 

ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று தனக்கு இரவு தகவல் வந்தது எனவும் மருத்துவமனைக்கு செல்ல முதலில் ஜெயலலிதா மறுத்ததாக கேள்விபட்டேன் எனவும் குறிப்பிட்டார். 

ஜெயலலிதா மயங்கிய பிறகே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வது நாளில் பார்த்தேன் எனவும் தெரிவித்தார். 

சசிகலாவுக்கும் மருத்துவர் சிவக்குமாரும் மருத்துவமனைக்கு செல்லலாம் என வலியுறுத்தியதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கால் மணி நேரம் கழித்து ஜெயலலிதாவிற்கு நினைவு திரும்பியதாகவும் குறிப்பிட்டார். 

ஜெயலலிதாவை மூன்று முறை மருத்துவமனையில் பார்த்ததாகவும் அவருக்கு கால்கள் வெட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார்.