இந்திய பெண் அரசியல்வாதிகளில் முத்திரை பதித்தவர் ஜெயலலிதா. கடின உழைப்பால் சினிமா, அரசியல் வானில் உச்சம் தொட்டவர். இவரது பிறந்த தினம் பிப்ரவரு 24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக இந்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். 1989-ம் ஆண்டு திமுக தலைமையில் ஆட்சி அமைந்த போது அதிமுகவுக்கு தலைமை வகித்த ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். மாநிலங்களவையில் 1984 முதல் 1989 வரையில், உறுப்பினராக இருந்து நாடாளுமன்ற அனுபவத்தைப் பெற்றிருந்த அவருக்கு, சட்டப்பேரவையில் உரையாற்றுவதில் எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை. 

அப்போது, 9-வது சட்டப்பேரவை 1989-ம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. அந்தப் பேரவை அமைந்த நேரத்தில், பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஜெயலலிதா உருவெடுத்தார். அப்போது தமிழ்குடிமகன் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, தமிழ்குடிமகனை வாழ்த்திப் பேசினார். இதுவே முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பேரவை கன்னிப் பேச்சாக அமைந்திருந்தது. மேலும், சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பேரவையின் முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.