சென்னையில் நடந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிக்கு பாஜக இன்னும் எழுதி தரவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய மக்கள் மீது போலீஸார்  தடியடி நடத்தினர். இந்தச் சம்பவத்தை கண்டித்து இன்றும் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டம்  குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.


 “வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் போலீஸார் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பெண்களும் தாக்கப்பட்டுள்ளனர். வீடியோக்களை தமிழக முதல்வர் ஆய்வு செய்து தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்தத் தாக்குதல் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தால் ஏமாற்றமே கிடைக்கும்.
டெல்லியில் ஷாகீன் பாக்கில் 2 மாதங்களாகப் போராட்டம் நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கின்றனர். இது ஜனநாயக குரலை நெறிப்பது போல உள்ளது. சென்னையில் நடந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிக்கு பாஜக இன்னும் எழுதி தரவில்லை. அதனால்தான் அவர் வாயைத் திறக்கவில்லை. அஸ்ஸாமில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 19 லட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் இருப்பவர்களுக்கும் ரஜினி குரல் கொடுக்கவில்லை. வசனங்களை வாசிப்பவராகதான் ரஜினி உள்ளார்.” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.