சபரிமலை விவகாரத்தில் பெண்பக்தர்களுக்கு எதிராக  கரடுமுரடான கருத்துக்களைக் கூறி சர்ச்சையை உண்டாக்கி வந்த ராகுல் ஈஸ்வரன் இன்று ஒரு ’மீ டூ’ சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

சமூக வலைதள செயல்பாட்டாளரும், பத்திரிக்கையாளருமான இஞ்சி பெண்ணு என்பவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளார். அதில்  தாழமோன் தந்திரிகள் குடும்ப வாரிசும், ஐயப்ப தர்ம சேனா தலைவருமான ராகுல் ஈஸ்வரன், தன்னை  பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். 

“ஒரு முறை அவரது அழைப்பின் பேரில் ராகுல் ஈஸ்வரன் இல்லத்திற்கு சென்றிருந்தேன்.  நான் சென்றவேளை வீட்டில் அவர் மட்டுமே இருந்தார். தனது அம்மா இப்போது வெளியே சென்றுள்ளதாக கூறினார். பிறகு என்னை அமரச் சொன்னார். அப்போது அவர் தொலைக்காட்சியில் ஆபாச படத்தை போட்டார். அதை பார்த்த எனக்கு அசவுகரியம் ஏற்பட்டது. 

பிறகு என்னை அழைத்துக்கொண்டு அவரது வீட்டை முழுக்க சுற்றிக்காட்டினார். ஒரு அறையை காட்டி அது தனது படுக்கை அறை என்றார். பிறகு என்னை கட்டிப்படித்து முத்தமிட  முயன்றார்  என்பது உள்ளிட்ட அந்த சம்பவம் தொடர்பான பல தகவல்கள் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பதிவில் இஞ்சிப்பெண்ணு தனது புகைப்படத்தை வெளியிடவில்லை.

இத்தகவலை மறுத்து உடனே ஒரு வீடியோ பதிவு வெளியிட்ட ராகுல் ஈஸ்வரன் மேற்படி தகவலை முழுவதுமாக மறுக்கிறார்.