சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் சாமியார் நித்யானந்தா. இவர் மீது பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது 2 மகள்களை கடத்தி அகமதாபாத்தில் ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக கூறினார்.

அதன் பேரில் நித்யானந்தா மீது கடத்தல் வழக்குபதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, நித்யானந்தா மீது கர்நாடகத்தில் பாலியல் வழக்கு உள்ளது. அடுத்தடுத்த வழக்குகள் காரணமாக நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவானார். அவர் ஈகுவெடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நான் இந்தியாவுக்குத் திரும்பும்போது பிரதமராக யார் இருக்க முடியும்?  என தனது பி.எம்.ஓ கைலாசா ட்விட்டர் அக்கவுண்டில் கருத்துக்கேட்டு வாக்களிக்கக் கூறியுள்ளார். அதில் டிரம்ப், ராகுல்காந்தி, நரேந்திரமோடி, சசிகலா என நான்கு பெயர்களை பரிதுரைத்துள்ளார். அதன்படி டிரம்புக்கு 11.2 சதவிகிதம் பேரும், ராகுல் காந்திக்கு 22.3 சதவிகிதம் பேரும், மோடிக்கு 38.1 சதவிகிதம் பேரும், சசிகலாவுக்கு 28.4 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். அதற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் நீங்கள் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் எனக் கூறி நையாண்டி செய்துள்ளனர்.