இலங்கை ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு 50 மில்லியன் டாலர் உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இதை தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர் படுகொலையில் போர் குற்றவாளியான இலங்கைக்கு இந்தியா எந்த விதத்திலும் உதவக்கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை குறித்து போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், 'இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருப்பது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும். இந்த நிதியை ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள அரசு பயன்படுத்தும் ஆபத்து உள்ளது. ஈழத்தமிழர் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு அளித்த உறுதியை இலங்கை காப்பாற்றவில்லை. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர் படுகொலை குறித்த போர்க்குற்ற விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்கவில்லை. இத்தகைய சூழலில் இலங்கைக்கு பாதுகாப்பு கருவி வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன?' என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், ஈழத்தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசு குற்றவாளி; தண்டிக்கப்பட வேண்டிய நாடு. அத்தகைய நாட்டுக்கு இந்தியா 50 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவது   போர்க்குற்றத்திற்கான வெகுமதியாகவே அமையும். எனவே, இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக் கூடாது! என்றும் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.