கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் மோடி அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இதுவரை இந்தியாவில் 4,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  109 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில்  292 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டிலேயே கொரோனா வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக  மகாராஷ்டிரா இருந்து வருகிறது. 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்புடைய விவகாரங்கள் பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதீபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா ஆகியோருடனும் கொரோனா குறித்து தொலைபேசி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு அளித்துள்ளார். 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்;- கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய பரவலான பரிசோதனை முறை தேவைப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான இரண்டு வாரக் காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியது வரவேற்கத்தக்கது. கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள். அரசு எடுத்த நடவடிக்கையில் குறைகளை எடுத்துக் கூறினால், அதை ஆக்கப்பூர்வமான விமர்சனமாகப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.