அனைத்திற்கு தலையாட்டுபவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளது திமுக- காங்கிரஸ் கூட்டணி இடையே மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கே.எஸ்.அழகிரியுடன் கே.வி.தங்கபாலு, விஷ்ணுபிரசாத் எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ’’திமுகவுடனான கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. காங்கிரஸ்- திமுக ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்ததாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

ஆனால், கமல்ஹாசன் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் ஆரோக்கியமான விவாதங்கள் செய்வது தவறில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் இரு கட்சி கூட்டணி தொடரும். திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் தான் நடந்தது. குடியுரிமை சட்டம் குறித்து கருத்து கூறமுடியாத அதிமுக எங்கள் கூட்டணி குறித்து கருத்து சொல்வது தவறு. துக்ளக்குடன் முரசொலியை ரஜினி ஒப்பிட்டது தவறு.

தேர்தலில் தனித்து நிற்க இந்தியாவில் எந்தக் கட்சிக்கும் எந்தக் கட்சிக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. திமுக - காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசி முடித்துள்ளோம். இனி கூட்டணியில் ஏதாவது பிரச்னை வந்தால் நானும், மு.க.ஸ்டாலினும் கலந்து பேசுவோம். மற்றவர்கள் பேசத்தேவையில்லை. எந்த முடிவு எடுக்கவும் எனக்கு காங்கிரஸ் தலைமை சுதந்திரம் கொடுத்துள்ளது. அனைத்திற்கு தலையாட்டுபவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது’’என்று அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் இந்திய அளவில் எந்தக் கட்சியும் தனித்து நின்று செல்வாக்கை நிரூபிக்க முடியாது என கே.எஸ்.அழகிரி கூறியிருப்பது திமுகவினரை  மீண்டும் கோபப்பட வைத்திருக்கிறது.