திமுகவை பொறுத்தவரை தற்பொழுது முதல் டார்கெட் நான் தான் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், மழை நீர் வடிகால் ஏற்படுத்தல் உள்ளிட்ட 112 பணிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில். மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளில், ஆற்று மணல் பயன்படுத்துவதாகக் கூறி எம்-சாண்ட் பயன்படுத்தியதாகவும், தார்ச்சாலை அமைக்கும் பணியில் பயன்படுத்தப்படும் தாருக்கு இரண்டு மடங்கு கணக்கு காட்டியது உள்ளிட்ட முறைகேடுகளில் 600 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக திமுக அவ்வப்போது பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறது. 

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி;- திமுகவை பொறுத்தவரை தற்பொழுது முதல் டார்கெட் நான்தான். என் மீதான வழக்கு 13-ம் தேதி வருகிறது; அதுபற்றி தவறான தகவல்களை மு.க.ஸ்டாலின் மூலம் கசிய விடுகின்றனர். என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப தயாராக உள்ளனர் என கேள்விப்படுகின்றேன். என் மீது எந்த குற்றச்சாட்டு வேண்டுமானாலும் கூறட்டும்; ஆனால் பத்திரிகை, நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம். ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.