கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை 2 முறை திருவாரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அசோகன். 2006-ம் ஆண்டு இவர், தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். சென்னை பட்டினப்பாக்கத்தில் 2-வது மனைவி ஹேமாவுடன் வசித்து வந்தார். 2015-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி ஹேமா, கணவரின் உதவியாளரை அழைத்துக் கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் வழங்க சென்றார்.

ஹேமா வீட்டிற்கு வர இரவு 11 மணி ஆனது. அப்போது அசோகன், ஹேமா மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். ஹேமா அவரது தாயார் ஆகியோரை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கைத்துப்பாக்கியால் சுட்டு மிரட்டினார் அசோகன். இதனால் பயந்து போன ஹேமா தாயாரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இதுகுறித்து ஹேமா பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி அசோகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில், சிறப்பு வக்கீல் ராஜேந்திரன் காயத்ரி ஆஜராகி வாதாடினார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இன்று அந்த வழக்கில் நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.