நீங்கள் இமயமலைக்கே சென்று, சாமியார்களோடு ஆன்மீக அரசியலை செய்ங்க... சூப்பரின் சுயரூபத்தை காட்டிய முகநூல் பதிவு!

facebook Status Against Rajinikanth Political entry
First Published Jan 6, 2018, 9:25 AM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு செய்தது என்ன ? அவர் ரசிகர்களுக்கு செய்தது என்ன? ரஜினியின் அடுத்த கட்ட ப்ளான் என்ன? அவரையே நினைத்துக்கொண்டிருந்த ரசிகனுக்கு செய்தது என்ன? அவர் இருந்த சினிமா திரைக்கு செய்தது என்ன? இப்படி பல கேள்விகளை முன்வைத்து சமூக வலைதளத்தில் (facebook) ஒரு பதிவு நமக்கு சிக்கியது.

1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படம், ரஜினிகாந்தை, கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொண்டு சென்றது.  ரஜினியின் திரை வாழ்க்கையில் பாட்ஷா படம் ஒரு முக்கிய மைல்க்கல்.  அந்த திரைப்படத்தின் வெள்ளி விழா நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாக, 10 ஜுலை 1995ல், திரைப்பட இயக்குநர் மணி ரத்னம் வீட்டில் குண்டு வெடித்தது.

மணி ரத்னத்தின் பாம்பே திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் சரியாக சித்தரிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அவர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது.   இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பாட்ஷா பட விழாவில் பேசிய ரஜினி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருகிறது என்று பேசினார்.

பாட்ஷா படத்தை தயாரித்தது மூத்த அரசியல்வாதி ஆர்எம் வீரப்பனின் சத்யா மூவிஸ்.  விழா மேடையில் ரஜினிகாந்தோடு இருந்த ஒரே காரணத்துக்காக வீரப்பனை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.  வீரப்பன் நீக்கப்பட்டதோடு அந்த விஷயம் முடியவில்லை.  அதிமுக அடிமைகள், ரஜினிகாந்தின் உருவபொம்மைகளை எரிப்பது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவது என்று களத்தில் இறங்கினார்கள்.

அப்போதெல்லாம் ஜெயலலிதா தன் வீட்டிலிருந்து தலைமைச் செயலகமோ, அல்லது வேறு எங்கு சென்றாலும், சாலையில் போக்குவரத்து, குறைந்தது 20 நிமிடத்துக்கு நிறுத்தப்படும்.  ஜெயலலிதா செல்லும் சாலைகள் அனைத்திலும் இதே நிலைதான்.   அப்போது சிறப்புப் பாதுகாப்புப் படை  என்று ஒரு படை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக நியமிக்கப்பட்ட விஜயக்குமார் செய்த அராஜகங்களுக்கு அளவே இல்லை.   அப்படி ஒரு நாள் கதீட்ரல் சாலையில் இதே போல ஒரு போக்குவரத்து நெறிசலில் சிக்கிய ரஜினிகாந்த், காரை விட்டு கீழே இறங்கி, நடந்தே தன் வீட்டுக்கு சென்றார்.  இவையெல்லாம் அந்த காலத்தில் பெரிய செய்திகளாயின.

காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் கூட்டணி 1993ம் ஆண்டே முறிந்து விட்டதாக ஜெயலலிதா அறிவித்து விட்ட நிலையில் மீண்டும் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அதிமுகவோடு கூட்டணி வைக்காது என்றே ரஜினிகாந்த் உறுதியாக நம்பினார்.   1995ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் மூன்றாவது மாதத்தில், அப்போதைய பிரதமர் நரசிம்மராவை, ரஜினிகாந்த் டெல்லியில் சந்தித்து பேசினார்.   ஆட்சி மாற்றத்துக்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், திமுக அல்லாத ஒரு மூன்றாவது அணி காங்கிரஸ் தலைமையில் அமைய வேண்டும் என்றும், அதிமுகவினரின் வன்முறையிலிருந்து தன் ரசிகர்களுக்கு பாதுகாப்பு அமைய வேண்டும் என்றும், நரசிம்மராவிடம் கோரிக்கைகள் வைத்தார்.

ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு நெருக்கமாக, நரசிம்மராவ், மீண்டும் ஜெயலலிதாவோடு கூட்டணி அறிவித்தார்.  தன்னிடம் ஆட்சி மாற்றத்துக்கு உதவுவேன் என்று சில மாதங்களுக்கு முன்னால் வாக்குறுதி அளித்த ராவ் இப்படியொரு முடிவெடுப்பார் என்பதை ரஜினி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

அதற்கு பிறகுதான், காங்கிரஸ் உடைந்து, கருப்பையா மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகியது.  அப்போதும் ரஜினி நேரடியாக பிரச்சாரத்துக்கு வரவில்லை.  சன் டிவி மூலமாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.  அந்த பிரச்சார வீடியோவில்தான், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று பேசினார்.    அந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மூப்பனார்,  எங்களின் வெற்றிக்கு ரஜினிகாந்த் ஒரு முக்கியமான காரணம் என்று கூறினார்.

அதுதான் தொடக்கப்புள்ளி.  அதற்கு பிறகு, ரஜினிகாந்த் இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று நடந்த 21 ஆண்டு கால விவாதங்களுக்கான விடை 31 டிசம்பர் 2017 அன்று கிடைத்துள்ளது.   இந்த காலகட்டத்துக்குள், ரஜினி ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு வயது 45ஐ கடந்துள்ளது.

சரி. ரஜினிகாந்த் அனைத்தையும் தெளிவுபடுத்தி விட்டாரா ?

“நான் அரசியலுக்கு வருவது உறுதி.  இது காலத்தின் கட்டாயம்.  அரசியல் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்.  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அவகாசம் போதாது. அதனால் போட்டியிடப் போவதில்லை.  பாராளுமன்றத் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்பேன்.

எனக்கு பதவி வேண்டுமென்றால் நான் 1996லேயே என்னை பதவி தேடி வந்திருக்கும்.   45 வயதில் பதவிக்கு ஆசைப்படாதவனா 65 வயதில் ஆசைப்படப் போகிறேன்.

அரசியல் ரொம்ப கெட்டு விட்டது. தமிழ்நாட்டு அரசியல் ரொம்ப கெட்டு விட்டது.  ஜனநாயகம் சீர்கெட்டுப் போய் விட்டது. கடந்த ஒரு ஆண்டாக தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்து விட்டது.  எல்லா மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் நான் முடிவெடுக்கவில்லை என்று சொன்னால், என்னை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை என்ற குற்ற உணர்வு நான் சாகும் வரை என்னை துரத்தும்.

மாத்தணும்.  எல்லாத்தையும் மாத்தணும்.  அரசியல் மாற்றத்துக்கு நேரம் வந்து விட்டது.  சிஸ்டத்தை மாற்ற வேண்டும்.  உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும்.

பழைய காலத்தில் அரசன் போருக்கு போவான். எதிரி நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிப்பான். இன்றைக்கு ஜனநாயகத்தின் பெயரால் அரசியல்வாதிகள் சொந்த மக்களையே கொள்ளையடிக்கிறார்கள்.   ஜனநாயக ரீதியாக இது எதிர்க்கப்பட வேண்டும்.

நாடு முழுக்க மன்றங்களை உருவாக்க வேண்டும்.  இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரையும் இணைக்க வேண்டும்.  மன்றம் இல்லாத மூலை முடுக்கே இல்லை எனும் அளவுக்கு உருவாக்க வேண்டும்.  தேர்தலுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அது வரை நாம் அரசியல் பேச வேண்டாம்.  நான் உட்பட.  அரசியல்வாதிகளை திட்ட வேண்டாம்.  அன்றாட அரசியலை குறைசொல்வது திட்டுவது என்பது வேண்டாம்.  போராட்டம் நடத்துவது வேண்டாம்.  அதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.

சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் உரிய நேரத்தில் கட்சியை தொடங்கி, எதை செய்ய முடியுமோ, அதை மக்களிடம் விளக்கி சொல்லி, அதை செய்ய முடியவில்லையென்றால் ராஜினாமா செய்வோம்.“

21 ஆண்டுகாலம் காத்திருந்த பிறகு, ரஜினியின் அரசியல் அறிவிப்பு என்பது, அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுக்கவே எதிர்ப்பார்ப்பை உருவாக்கக் கூடியது என்பதை நம் அனைவரையும் விட ரஜினிகாந்த் நன்றாகவே அறிவார்.  அதற்காக ஒரு சிறு தயாரிப்பு வேலை செய்திருக்க வேண்டாமா ?

இப்படியா மீண்டும் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துவது போல பேசுவது ?  எனக்கு பதவி வேண்டுமென்றால் 1996லேயே பதவி தேடி வந்திருக்கும் என்று கூறுகிறாரே ரஜினி ….   இவர் புதிதாக கட்சி தொடங்கி முதல்வராவதை, திமுக தலைவர் கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டா இருந்திருப்பார் ?  தன் சொந்த மகனையே முதல்வராக்க விடாமல் பார்த்துக் கொண்ட கருணாநிதி, ரஜினியை முதல்வராக விட்டிருப்பார் என்று இவர் பேசுவது இவர் அறிவீனத்தையே காட்டுகிறது.

கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டது, பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தை பார்த்து சிரிக்கும் நிலைக்கு தமிழகம் ஆளாகி விட்டது என்றால், இத்தனை வருடங்கள் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் நிலையா இருந்தது ?   இதற்கு முன்பு நடந்த ஆட்சியில் ஊழலே நடக்கவில்லையா ?   1991-96ல் நடந்த ஊழல்களை விட, அதன் பிறகு பல மடங்கு அதிக ஊழலிலும், வசூலிலும் ஜெயலலிதா ஈடுபட்டது ரஜினிக்கு தெரியாதா ?    ஆனால், இவை குறித்தெல்லாம் ரஜினிகாந்த் எப்போதுமே வாய் திறந்தது கிடையாது.

2004ம் ஆண்டு சுனாமியால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, பாலிவுட்டின் ஹீரோ விவேக் ஓபராய் தமிழகம் வந்து, தமிழக மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஒரு கிராமத்தை தத்தெடுத்து சுனாமி மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.   ஆனால் தமிழகத்திலேயே இருந்த ரஜினி ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

தன் குடும்பம், தன் திரையுலகம், அதன் வியாபாரம் என்பதில் ரஜினி காண்பித்த ஆர்வத்தை, தமிழக மக்களின் நலனிலோ, தமிழகம் சந்தித்த சிக்கல்களிலோ கடந்த 21 ஆண்டுகளாக ஒரு முறை கூட வெளிக் காட்டியதில்லை.

தன் ரசிகர்களுக்காகக் கூட ரஜினிகாந்த் எதுவுமே செய்ததில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.   பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ரஜினிகாந்த் குறித்து கூறிய கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2 ஏப்ரல் 2004ம் ஆண்டு மதுரை வந்த ரஜினி ரசிகர்களை, பாமக தொண்டர்கள் கடுமையாக தாக்கினர்.  இதில் ரஜினி மன்ற நிர்வாகிகள் பலர் காயமடைந்தனர்.   காவல்துறை ராமதாஸ் மீது எப்ஐஆர் போட்டது.    இந்த சம்பவத்தைக் கூட ரஜினி கண்டித்ததில்லை.

தற்போது அரசியலுக்கு வரும் ரஜினி, தன் மன்றத்தின் முத்திரையாக அறிவித்திருப்பது எதை ?  பாபாஜி என்ற ஒரு கற்பனை பாத்திரத்தின் முத்திரையை.   ரஜினி தோன்றிய மேடைகளிலும், அவர் லெட்டர் ஹெட்டிலும், தோன்றும் இந்த பாபாஜி முத்திரை ஆபன முத்ரா என்று ஆன்மீக விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன.

தான் முன்னெடுக்கப் போவது ஆன்மீக அரசியல் என்கிறார் ரஜினி.   ஆன்மீகத்துக்கு அரசியலில் என்ன வேலை ?    ஆன்மீகம் என்பதே தனி நபர் சம்பந்தப்பட்டது அல்லவா ?   ஆன்மீகம் மற்றும் அது குறித்த தேடல்கள் அனைத்தும் தனி நபர் சம்பந்தப்பட்டது.  இதை பொது வாழ்வில், அரசியலில் இறங்கும் ரஜினிகாந்த் முன்னிறுத்துவது எப்படி சரியாக இருக்கும் ?

தொடக்க காலத்தில் ராகவேந்திர பக்தராக இருந்த ரஜினிகாந்த், ராகவேந்திரர் புகைப்படங்களை தன் படக் காட்சிகளில் வருவது போல வைத்ததோடு, ராகவேந்திரர் படமே எடுத்து, அதில் அவரே நடித்தார்.  ராகவேந்திரர் பக்தராக இருந்த ரஜினிகாந்த் பாபா பக்தராக மாறிய பின்னர், பாபாஜியின் “மகிமைகளை” மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவே, பாபா என்றொரு திரைப்படத்தையும் எடுத்தார்.   ரஜினி முன்னெடுக்கும் இந்த பாபாஜி ஆன்மீகம் மக்களிடத்தில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றது என்பதற்கு, பாபா திரைப்படம் பெற்ற “மாபெரும் வெற்றியே“ அதற்கு சான்று.  வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கடும் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தை திருப்பிக் கொடுத்தது வரலாறு.

இப்போது மீண்டும் அதே பாபா முத்திரையோடு “ஆன்மீக அரசியலை“ முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் ரஜினி.   ஆன்மீக அரசியல் என்றால் நேர்மையான, நாணயமான, ஊழலற்ற, சாதி மத சார்பற்ற அரசியல் என்று விளக்கம் வேறு.   இப்படி நேர்மையான அரசியல் நடத்துவதற்கு எதற்காக ஒரு மத அடையாளம் என்பதுதான் நம் அனைவரின் முன்பாக உள்ள கேள்வி.

தமிழகத்தில், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சிறு அளவில் புத்தர்கள் மற்றும் ஜைனர்கள் ஆகியோர் உள்ளனர்.   இந்து மதம் அல்லாத பிற மதத்தினருக்கு பாபாஜி முத்திரையின் மூலம் என்ன செய்தியை சொல்ல விரும்புகிறார் ரஜினிகாந்த் ?

பிஜேபி மற்றும் சங் பரிவாரங்களால் இன்று நாடே மதவாத அலையில் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு மிகப் பெரிய மாநிலத்தின் தேர்தலில், ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட, பெயருக்குக் கூட நிறுத்தாமல், ஒரு தேர்தலை ஒரு மதவாத தேசிய கட்சி சந்தித்து வெற்றி பெற முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.   மாட்டுக் கறி உண்பதையே கொலைக் குற்றமாக சித்தரித்து, அதற்காக கொலை கூட செய்யத் தயங்காத ஒரு கூட்டம், இந்தியா முழுவதையும் காவி மயமாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.   நாடெங்கும் சிறுபான்மையினரிடையே ஒரு அச்ச உணர்வு விதைக்கப்பட்டுள்ளது.  இந்தியா போன்ற ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாட்டில், சிறுபான்மையினர் மிகப் பாதுகாப்பபாக உணர வேண்டும்.   ஆனால் அதற்கு நேர்மாறான ஒரு நிலைதான் இன்று உருவாகியுள்ளது.   இந்த நிலையில் பாபாஜி முத்திரையோடு மேலும் ஒரு தலைவர் அரசியல் உலகில் காலெடுத்து வைப்பது என்பது, தமிழகத்துக்கு பெரும் ஆபத்தாகவே முடியும்.

ஊழலற்ற ஆட்சி என்ற முழக்கத்தையும் வைக்கிறார் ரஜினி.   அவர் நடித்த கோச்சடையான் என்கிற பொம்மை திரைப்படத்தை, அவர் மனைவி  லதா, இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்தது.  பெங்களுரு காவல்துறை லதா மீது எப்ஐஆர் பதிவு செய்யும் வரை சென்று, பின்னர் பணம் கொடுத்து சரி செய்யப்பட்டது.   ரஜினியின் மகள் தொடங்கிய ஆக்கர் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த கோவா திரைப்படத்தில் பணியாற்றிய 90 சதவிகித ஊழியர்களுக்கு இறுதி வரை பணமே தரவில்லை.  இறுதியில் இதுவும் நீதிமன்றம் சென்று, பின்னர் சரி செய்யப்பட்டது.  

லதா ரஜினிகாந்த் ஆழ்வார்பேட்டையில் நடத்தி வரும், ட்ராவல்ஸ நிறுவனத்திற்கான இடத்தை வாடகைக்கு விட்ட சென்னை மாநகராட்சி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கடை வாடகையை உயர்த்துவது வழக்கம்.   இது போல உயர்த்தியதை எதிர்த்து நீதிமன்றம் சென்று, வழக்கு தாக்கல் செய்தார் லதா.   உரிய வாடகையை செலுத்தாவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.  

கிண்டியில் லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் கட்டிட உரிமையாளருக்கு 10 கோடி வாடகை பாக்கியை வைத்து, அவர் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்ததும் 2 கோடியை தருவதாக ஒப்புக் கொண்டு, பின்னர் அதையும் தராமல் இழுத்தடித்ததால், ஒரு கட்டத்தில் அவர் பள்ளியை இழுத்துப் பூட்டினார்.  

இவை அனைத்தும் ஒன்று ரஜினிக்கு தெரியாமல் நடந்திருக்க வேண்டும்.  அல்லது, தெரிந்தே நடந்திருக்க வேண்டும். தெரியாமலே நடந்திருந்ததாக வைத்துக் கொண்டால், ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்வதற்கு கூட ரஜினிக்கு துப்பு இல்லை என்றே முடிவெடுக்க முடியும். தெரிந்தே நடந்திருந்தது என்றால் பேசுவதற்கு எதுவுமில்லை.

இவற்றையெல்லாம் ஊடகங்கள் கடுமையாக விமர்சித்திருக்க வேண்டும்.  கடுமையான கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும்.  ஆனால், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு, திமுக ஆட்சிக்கு வந்து விடப் போகிறதோ என்ற அச்சம் இருப்பதை பார்க்க முடிகிறது.  மேலும், 60 ஆண்டு கால திராவிட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, வாராது ஒரு மாமணி வராது காத்திருந்தபோது, வந்தவர்தான் ரஜினிகாந்த் என்றே முடிவெடுத்திருப்பதாக தோன்றுகிறது.

ரஜினி ஒரு காலமும் எம்ஜிஆராகவோ, ஜெயலலிதாவாகவோ, ஆகவே முடியாது.   அவர்கள் இருவருமே அரசியலில் நேரடியாக இறங்குவதற்கு முன்பாக, அவர்கள் சார்ந்திருந்த திமுக மற்றும் அதிமுகவில் களப்பணி ஆற்றியவர்கள்.   கட்சிக்காக உழைத்தவர்கள்.   ஆனால், ரஜினிகாந்தோ, பொது விஷயம் குறித்து ஒரு கருத்தைக் கூட வெளிப்படையாக கூறியதில்லை.

தமிழக அரசியலை மிக உன்னிப்பாக கவனித்து வரும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில்

“அரசியலில் இறங்குவேன் என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பை சந்தேகத்தோடுதான் அணுக வேண்டும்.   லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்த ரஜினிகாந்த்தால் மட்டுமே ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் நேரடியாக எதிர்க்க முடியும் என்று கடந்த காலத்தில் அவர் கருதப்பட்டார்.  1996ம் ஆண்டு, மக்கள் எதிர்ப்பார்ப்போடு இருந்தபோது, அவர் ஏறக்குறைய அரசியலில் இறங்கினார் என்றே கூற வேண்டும்.   ஆனால் அதன் பிறகு, அவர் தொடர்ந்து ஊகங்களை எழுப்பும் வேலையை மட்டுமே செய்து வந்திருக்கிறார்.   தற்போது அவர் அரசியலில் இறங்குவதாக அறிவித்துள்ளார்.  ஆனால் மக்கள் அவரை விரும்புகிறார்களா என்பதுதான் கேள்வி. 

நடிகராக ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு செய்தது என்ன ? அவர் ரசிகர்களுக்கு செய்தது என்ன ?    அவரையே உயிராக நினைத்து அவர் பின்னால் வரும் ரசிகர்களின் வாழ்வில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன ?  ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அபிமானத்தை எப்படி காசாக்குவது என்பதை மட்டுமே அவர் இத்தனை நாட்களாக செய்து வந்திருக்கிறார்.   அவரும் அவர் குடும்பமும், அவர் ரசிகர்களை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி அவரின் ரசிகர்களை வைத்து பயனடைந்ததைத்தான் நாம் இது வரை கண்டிருக்கிறோம்.  இனியும் அதுதான் நடக்கப் போகிறது. 

கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத ஒரு சூழலில், இதுதான் அரசியலில் இறங்க நல்ல தருணம் என்று ரஜினி முடிவெடுத்திருக்கலாம்.   ஒரு நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த ரஜினி, கடந்த ஒரு ஆண்டாகத்தான் தமிழக அரசியல் சூழல் மோசமாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளார். 

இத்தனை காலம் தயக்கத்தோடு இருந்த ரஜினியை இப்போது அரசியலில் இறங்கத் தூண்டியது என்ன ?   அவரின் அரசியல் வாழ்வில் அவர் கரையேற உதவுவதாக யாரோ அவருக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.   இப்படி நீளும் இந்த உதவும் கரம், நிச்சயம் பிஜேபியின் கரங்களாக இருக்க எல்லா சாத்தியங்களும் உள்ளன.  ஏனெனில், ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு இழுத்து வர, இந்த கட்சி பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.  அவர்களின் திட்டம் தற்போது ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்றே கூற வேண்டும்.   ஏனெனில், அவர்களின் நோக்கத்தை தன்னுடைய “ஆன்மீக அரசியல்” மூலமாக நிறைவேற்ற உள்ளார். 

இதர வட மாநிலங்களைப் போன்றது தமிழகம் அல்ல என்பதை பிஜேபி நன்றாகவே புரிந்து வைத்துள்ளது.    தமிழக அரசியல் பல்வேறு விஷயங்களை பல நேரங்களில் சுற்றி வந்திருக்கிறது.  ஆனால் ஒரு நாளும் அது மதவாத அரசியலை சுற்றி வந்தது கிடையாது.  இதர மாநிலங்களைப் போல, தமிழகத்தில் இந்து வாக்கு வங்கி என்பது கிடையாது.  அதை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே பிஜேபியின் ஒரே குறிக்கோள்.   ரஜினிகாந்தின் “ஆன்மீக அரசியல்” மூலமாக ஒரு இந்து வாக்கு வங்கியை உருவாக்கி, அந்த வாக்கு வங்கியை கபளீகரம் செய்யலாம் என்பதே பிஜேபியின் திட்டம். 

ரஜினி நிச்சயமாக கருணாநிதியோ, ஜெயலலிதாவோ அல்ல என்பதனால், தமிழக அரசியலில் மூக்கை நுழைத்து, தமிழக உரிமைகளை தொடர்ந்து பறித்து வரும், மத்திய அரசு போன்ற ஒரு அரசை எதிர்த்து ரஜினி குரல் கொடுப்பார் என்று ஒரு நாளும் எதிர்ப்பார்க்க முடியாது.   தற்போதைய சூழல்களை அலசிப் பார்க்கையில், பிஜேபிக்கான சப்ஸ்ட்டியூட் வீரராக, ரஜினி களமிறங்குகிறார் என்றே புரிந்து கொள்ள முடியும்.”  என்று விரிவாக கூறினார்.

ஜெயலலிதாவும், கருணாநிதியும், இல்லாத ஒரு குழம்பிய குட்டையில் தானும் எளிதாக பிஜேபி துணையோடு மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்திலேயே ரஜினி இருக்கிறார்.   அரசியலில் இறங்கலாம் என்ற எண்ணத்தோடு, குறைந்தது விஜயகாந்தைப் போல தன் ரசிகர் மன்றங்களை இறுதி வரை, பலமாகவும், உயிர்ப்போடும் கூட ரஜினி வைத்திருக்கவில்லை.   ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, ரஜினி ரசிகர் மன்றங்களை பதிவு செய்து, அவற்றுக்கு பதிவு எண் வழங்கும் நடைமுறையை ரஜினி கை விட்டு விட்டார்.    அரசியல் ஆசை இருக்கும் எந்த ஒரு நபராவது இப்படியொரு காரியத்தை செய்வானா ?  ரஜினி செய்தார்.

அதற்காகத்தான், தற்போது பதிவு செய்யப்படாத ஆயிரக்கணக்கான மன்றங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.  இந்த மன்றங்களை இணைத்து, ஒருங்கிணைத்து, அவற்றில் பொறுப்பான நிர்வாகிகளை நியமித்து, அவர்களை வைத்து வேலை வாங்குவது எளிதல்ல என்பது ரஜினிக்கு நன்றாகத் தெரியும்.  அவர் ரசிகர்கள் பலர், 45 வயதை கடந்தவர்களாகவே உள்ளார்கள்.  இவர்களால், இளம் தொண்டர்கள் போல துடிப்பாக செயல்பட முடியவே முடியாது.

பெயருக்கு ஒரு கட்சியை தொடங்கி விட்டு, பிஜேபி என்ற குதிரையின் மீது சவாரி செய்து, ஆற்றைக் கடந்து விடலாம் என்து மட்டுமே ரஜினியின் திட்டமாக இருக்கும்.  ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, பிஜேபி ஒரு மண் குதிரை என்பதை ரஜினி காலம் கடந்துதான் புரிந்து கொள்வார்.

ரஜினி அவர்களே.   தமிழகத்துக்கு ஆன்மீக அரசியல் தேவையில்லை.  நீங்கள் இமயமலைக்கே சென்று, அங்கே சாமியார்களோடு உங்கள் ஆன்மீக அரசியலை செய்து கொள்ளுங்கள்.   பாபாஜியின் மகிமையை இமயமலை சாமியார்களுக்கு புரிய வையுங்கள்.   எங்களுக்கு வேண்டாம்.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று 1996ல் கூறினார் ரஜினிகாந்த்.

எங்களை ஆண்டவன் காப்பாற்றாவிட்டால் கூட பரவாயில்லை.  நீங்கள் வந்து காப்பாற்றும் நிலையில் நிச்சயம் நாங்கள் இல்லை என ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பு: முகநூலில் கிடைத்த பதிவு