பரீட்சை எழுதவே இவ்வளவு செலவு, அம்மாவுக்கு இரும மருந்து வாங்கவே காசு பத்தல! டாக்டரெல்லாம் வேண்டாம்பா, கண்கலங்க வைக்கும் பதிவு!

facebook status about allotted NEET centres out of state
First Published May 5, 2018, 12:06 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



பிற மாநில மாணவர்களை எல்லாம் சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்துவிட்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் வேறு மாநிலங்களில் மையங்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வு நாளை நடைபெற இருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், நீட் தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட வெளிமாநில மையங்களிலேயேதான் தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.

போராட்டம், உண்ணாவிரதம், மறியல் என தங்களது வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழக மக்கள் வெள்ளம், புயலுக்கு மட்டுமல்ல நம்ம பிள்ளைங்க படிப்புக்காகவும் போட்டி போட்டு உதவி செய்வோம்னு ரவுண்டு கட்டி இறங்கியிருக்காங்க.

நீட் எழுத போகும் மாணவர்களுக்கு அத்தனை வசதிகளும் செய்து தரப்படும் என நடிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் நேற்று முழுவது இதே செய்தி ரவுண்டுகட்டி உலாவிக்கொண்டிருக்கையில், நம் கண்ணில் ஒரு பதிவு சிக்கியது. ஏழை அப்பாவுக்கும் மகளுக்குமான இந்த உரையாடல் வெறும் கற்பனைதான் என்றாலும், படித்து முடிக்கையில் தமிழகத்தில் எங்கேயோ ஒரு மூலையில் பேருந்து வசதிகூட இல்லாமல் அடுத்த வேளை சோத்துக்கே அல்லல்படும் கிராமத்து மாணவிக்கு நிகழ்ந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.

“ஏம் பாப்பா, ஹால் டிக்கட்டுல ராஜஸ்தான் போட்ருக்குதே, தப்பா போட்டுட்டாங்களா ?”

"இல்லப்பா ! , பரீட்சை எழுத ராஜஸ்தான் தான் போகணுமாம்,”

“இதென்ன சாமி அக்கிரமம், நம்மூர்ல படிக்க அங்க போயி எழுதணுமா ! நீயி பத்தாவதுல கலெக்டர் கையால விருது வாங்குன புள்ளனு சொன்னியா, திருவிழால

‘டெஸ்ஸாஜ்கோப்பு’ வாங்கினதெல்லாம் காட்டினயா ?”

“இல்லப்பா ..அது.... வந்து ...! “

“அட! இதென்னதுக்கு இப்படி அழுவர, ஒரு லாரி மூட்டைய ஒத்த ஆளா தூக்கிறவன் புள்ள, இந்த சின்ன விஷயத்துக்கு அழுவலாமா, இங்க பாரு .. உங்கப்பனை பாரு

....சரி அந்த ஊரு இங்கிருந்து எவ்ளோ தூரம் !”

“2500 கிலோமீட்டர் பா, வட இந்தியா, ட்ரெயின்ல போனா இரண்டு நாளாகும் !”

“சரி ! போயிறலா ஞ்சாமி எம்புட்டு காசு ஆகும் ?”

“ஜெனெரல் கிளாஸ் டிக்கெட்டு இரண்டு பேருக்கு போய் வர 3000 ரூவா, அங்க நைட்டு தங்க எப்படினு தெரிலப்பா.. அப்பா நான் ஒன்னு சொல்லட்டா... டாக்டரெல்லாம்

வேண்டாம்பா ,பரீட்சை எழுதவே இவ்வளவு செலவு, அம்மாவுக்கு இரும மருந்து வாங்கவே காசு பத்தமா இருக்கு, இதுல இது வேற, விடுப்பா ! “

“மொதல்ல இந்த பெரிய மனுசியாட்ட சிரிச்சிட்டே அழுவரத நிறுத்து, உங்கம்மா பொழுதினிக்கும் இருமறதே நீ டாக்டராயி காப்பாத்துவேனு தான், சரி போறதுக்கு நீ துணி சோறெல்லாம் கட்டி வை ! அப்பா போயி மொதலாளிய பார்த்துட்டு வரேன் !

“அப்புறம் பாப்பா, ஒன்னு தெரிஞ்சுக்க, படிச்சவனுக்கு தான் மொழி தேசம், சாமி எல்லாம் வேற வேற, படிக்காதவனுக்கு எல்லா சாமியும் ஒன்னு தான், எல்லா மொழியும் தமிழ் தான், அப்பா இருக்கமுட்டும் எதுக்கும் கவலைப்படக்கூடாது ! இந்த மீசைக்காரர் சொன்னாருன்னு அடிக்கடி ஒன்னு சொல்லுவியே, கருப்பு

சாமியாட்டம் வெறப்பா, நெஞ்ச தூக்கிட்டு, அத இப்ப ஒரு வாட்டி சொல்லு சாமீ !..”

“நான் வீழ்வேன் என நினைத்தாயோ ப்பா“