தூண்டிவிடப்பட்ட மதக் கலவரம், தவறான பொருளாதாரம், சுகாதார அச்சநிலையின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அந்தக் கடிதத்தில் மன்மோகன் சிங் எழுதியுள்ள விஷயங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்தக் கடித்தத்தில், “மிகக் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். வலிமையான ஆபத்துகளால் இந்தியாவின் ஆன்மா மட்டும் சிதைய போவதில்லை. உலகளவில் இந்தியாவின் ஜனநாயக சக்தியும் பொருளாதார இடமும் சுருங்கும் என்று மிகவும் வேதனைப்படுகிறேன்.


டெல்லி மதக் கலவரம் மதவாதிகளால் தூண்டிவிடப்பட்டது. இந்த விஷத்தில் இந்திய மக்களை சமாதானப்படுத்த வேண்டும். அது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்ககூடாது. செயல்களின் மூலம் அதை செய்து காட்ட வேண்டும். தற்போது உண்மை என்னவென்றால், சூழ்நிலை மிகவும் மோசமானதாகவும் வருத்தம் அடையும் அளவுக்கும் உள்ளது. நாம் அறிந்திருந்த இந்தியா தற்போது வேகமாக நழுவி சென்றுகொண்டிருக்கிறது.
வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்ட மதக் கலவரம், தவறான பொருளாதார மேலாண்மை, சர்வதேசத்தில் நிகழும் சுகாதார அச்சநிலை போன்றவை காரணமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளன” என்று மன்மோகன் சிங் அந்தக் கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.