தைரியமுள்ள கட்சி அதிமுக, யாரும் உரசிப் பார்க்க வேண்டாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதிக்க வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஹெச்.ராஜா பதிவிட்ட டுவிட்டர் பதிவில்;- கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு என்று குறிப்பிட்டிருந்தார். இவருடைய டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக தரப்பில்  ஹெச்.ராஜாவைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுக அரசு ஆண்மையுள்ள அரசு தான். தைரியமுள்ள கட்சி அதிமுக, யாரும் உரசிப் பார்க்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். ட்வீட் போட்டு ஓடி ஒளிபவர்கள், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பவர்கள் ஆண்மையுடையவர்களா? டுவிட்டரில் அதிமுக அரசை மறைமுகமாக விமர்சித்த ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

டுவிட்டரில் பதிவு போட்டுவிட்டு பிறகு அதை அட்மின்தான் போட்டார் என்பது ஆண்மை உடைய செயலா? டுவிட்டரில் எதையாவது போட்டுவிட்டு மன்னிப்பு கேட்பவர் ஹெச்.ராஜா என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இளங்கன்று பயமறியாது என்பதுபோல பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன் கடந்த காலத்தில் காத்துக்கிடந்தது யார் என அனைவருக்கும் தெரியும். கொரோனா பரவல் சூழல் இருப்பதால் விநாயகர் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.