மு.க.ஸ்டாலின் என்றுமே முதல்வர் ஆக முடியாது. வடிவேல் காமெடி போல, ‘நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிண்டலாக விமர்சனம் செய்தார்.
மொழிப் போர் தியாகிகள் தினத்தையொட்டி அதிமுக சார்பில் சென்னை அய்யப்பன்தாங்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மொழிப் போர் தியாகிகள் மற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தி பேசினார்.


“தமிழ் சமுதாயமானது தலை நிமிர்ந்து வாழ அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பாடுபட்டார்கள். ஆனால், மாநாடு என்ற பெயரில் செம்மொழி மாநாடு ஒன்றை நடத்தி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திமுக வீண் அடித்தது. உண்மையிலேயே மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தகுதி அதிமுகவுக்கு மட்டுமே எப்போதும் உண்டு. கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருந்துவருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கூடி உள்ளது.
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், மத்திய ஆட்சியில் பல ஆண்டுகள் இருந்தபோதும் கூட்டணியில் இருந்தபோதும் திமுக எந்தத் திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் கனவில் இருந்துவருகிறார். மு.க.ஸ்டாலின் என்றுமே முதல்வர் ஆக முடியாது. வடிவேல் காமெடி போல, ‘நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட’. கருணாநிதி  நல்ல உடல்நலத்தோஉ இருந்தபோதும், பிறகு உடல்நலம் சரியில்லாதபோதும் மு.க. ஸ்டாலினை முதல்வராக்க நினைக்கவில்லை. அவருக்கே தன் மகன் மீது நம்பிக்கை இல்லை. பிறகு தமிழக மக்களுக்கு அவர் மீது எப்படி நம்பிக்கை வரும்?” என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.