‘‘கதை கேளு... கதை கேளு... கழகத்தின் கதை கேளு!’’ மீண்டும் அதிமுக முகத்திரையை கிழிக்க வரும் ராமதாஸ்!
அதிமுகவைப் பற்றி 'கழகத்தின் கதை' என்று எழுதப்பட்ட நூலின் தொடர்ச்சியை வரும் 29ஆம் தேதி முதல் மீண்டும் தனது முகநூலில் எழுதவுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எம்.ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகான அதிமுகவரை, கழகத்தின் கதை: அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை என்ற தலைப்பில் ராமதாஸ் எழுதிய நூல் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது. இந்த நூலுக்கு பாமக அல்லாத கட்சியினர் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் இந்த நூலின் இரண்டாம் பாகத்தை மீண்டும் தனது முகநூல் பக்கத்தில் எழுதவிருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கதை கேளு... கதை கேளு... கழகத்தின்
கதை கேளு!’’ தொடரின் நீட்சி
ஜனவரி 29-ஆம் தேதி முதல் முகநூலில் தொடக்கம்..
தமிழக முதலமைச்சராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு திசம்பர் 5ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அக்கட்சியில் பதவிக்காக நடந்த கூத்துகள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தலைகுனிய வைத்தன. இதை அம்பலப்படுத்தும் வகையில் அதிமுகவின் தோற்றம் முதல் அன்றைய நிலை வரையிலான நிகழ்வுகளை ‘‘கதை கேளு... கதை கேளு... கழகத்தின் கதை கேளு!’’ என்ற தலைப்பில் 18.02.2017 அன்று தொடங்கி 27.04.2017 வரை 69 நாட்களில் 64 அத்தியாயங்களை எனது முகநூல் பக்கத்தில் எழுதினேன்.
இவை ‘‘கழகத்தின் கதை: அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை’’ என்ற தலைப்பில் நூலாக தயாரிக்கப்பட்டு 03.07.2017 அன்று வெளியிடப்பட்டு மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த நூலுக்கு இப்போதும் வரவேற்பு உள்ளது.
இது ஒருபுறமிருக்க அதிமுகவில் பதவிச் சண்டைகளும், கூத்துகளும் இன்னும் ஓயவில்லை. அதுபற்றியும் நான் எழுத வேண்டும் என்று என்னை நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசியில் பேசுபவர்களும் அன்புக்கட்டளை பிறப்பித்து வருகிறார்கள். அன்புக் கட்டளைகளை தட்டிக்கழிக்க முடியுமா? முந்தைய தொடரில் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப் பட்டது முதல் அதிமுக அணிகளின் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது வரையிலான வரலாறு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு பிந்தைய நிகழ்வுகளை இம்மாதம் 29-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் முகநூலில் பதிவு செய்ய உள்ளேன். படிக்கக் காத்திருங்கள்! என இவ்வாறு தனது பதிவில் கூறியிருக்கிறார்.