மலேரியா, காலரா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டபோது அவற்றைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட இந்திய தொற்று நோய் சட்டத்தைப் பயன்படுத்துவது பற்றி டாக்டர் ராமதாஸ் விளக்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பீதியால் தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. எனினும் கொரோனா வைரஸ் நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் சரிவர ஏற்படவில்லை. பொதுஇடங்களில் மக்கள் சுற்றிவருகிறார்கள். மைதானங்களில் மாணவர்கள், இளைஞர்களின் கூட்டத்தைக் காண முடிகிறது. இந்நிலையில் மக்கள் வெளியே வந்தால், அவர்கள் மீது இந்திய தொற்று நோய் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்திய தொற்று நோய் சட்டம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பம்பாயில் பரவிய பிளேக் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டமாகும். அப்போது பிளேக் நோயால் ஆயிரக்கணக்கானோர்  இறந்தனர். லட்சக்கணக்கானோர் மும்பையிலிருந்து வெளியேறினர். 
பின்னர் தேசிய அளவில் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது.  மலேரியா, காலரா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டபோது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது! ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆபத்தான தொற்றுநோய் பரவும் பட்சத்தில் அதைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள சட்டம் போதுமானதல்ல என்று அம்மாநில அரசு கருதினால்,  நிலைமை சமாளிக்க மாநில அரசுக்கு எல்லையில்லாத அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது!


இந்த சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும் விதிகளை மீறுவோருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 188வது பிரிவின்படி சிறை தண்டனை வழங்க முடியும். இந்த சட்டத்தின்படி பணியாற்றும் அதிகாரிகள் மீது எந்த வழக்குகளும் தொடர முடியாது. இது மத்திய அரசின் சட்டம். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்த சட்டத்தை மாநில அரசுகள் பயன்படுத்த  மத்திய கேபினட் செயலாளர் கடந்த மார்ச் 11-ஆம் தேதி அனுமதி அளித்தார்.” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.