வேலூரில் திமுக வெல்ல காரணமாக இருந்த வாணியம்பாடியில் இன்று நடைபெறுவதாக இருந்த திமுகவின் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை தோற்கடித்தார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வென்றதால், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுகவுக்கு இருந்த செல்வாக்குக் குறைந்துவிட்டது என்று அதிமுக பேசிவருகிறது. இடைத்தேர்தல் பாணியில் நடந்த வேலூர் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருப்பதைப் பெருமையாக திமுக பேசிவருகிறது.


இதற்கிடையே வேலூரில் திமுக வெற்றி பெற காரணமாக இருந்தது வாணியம்பாடி தொகுதிதான்,. வாணியம்பாடியில் திமுக 22 ஆயிரம் வாக்குகளளைக் கூடுதலாகப் பெற்றதால்தான் திமுக வேலூரில் வெற்றி பெற்றது. எனவே இந்தப் பகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் விரும்பினார். இதனால் இன்றைய தினம் வாணியம்பாடியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்த திமுக  தலைமை திட்டமிட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டிருந்தன. ஆனால், வேலூரில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால், நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தை ஒத்தி வைத்து திமுக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் மழையின் காரணமாக நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு 25ம் தேதியன்று வாணியம்பாடியில் மாலை 4 மணியளவில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.