Asianet News TamilAsianet News Tamil

டி.என்.பி.எஸ்.சி: திமிங்கிலங்களுக்குப் பதில் மீன்குஞ்சுகள் பிடிபடுகின்றன... ஜெயக்குமார் பதவி விலகணும்.. ஸ்டாலின் காட்டம்

சிபிசிஐடி விசாரணை நடைபெறுகிற நேரத்தில், அதுவும் முறைகேடுகள் குறித்து செய்தி வெளிவந்து 25 நாட்களுக்குப் பிறகு பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய தினம் திடீரென்று ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இத்தனை நாள் அமைச்சர் எங்கே போயிருந்தார்? யாருக்காக “சூப்பர் ஸ்போக்ஸ் மேனாக”ப் பணியாற்றி, இந்த முறைகேடுகளைக் கண்டு கொள்ளாமல் அமைதி காத்தார்? இப்போது ஏன் தேர்வாணைய அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்?

DMK president M,K.Stalin warning to admk government
Author
Chennai, First Published Jan 29, 2020, 10:08 PM IST

திமிங்கிலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சி செய்து, விசாரணையைத் திசை திருப்புவது திட்டமிட்ட, உள்நோக்கம் நிறைந்ததாகவே கருத வேண்டியதிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

DMK president M,K.Stalin warning to admk government
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், ‘தரகர்’களின் புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ‘குரூப்-4 தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள்’ வெளிச்சத்திற்கு வந்து, அதன் காரணமாக, தமிழக இளைஞர்கள் இந்த ஆணையத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டிருந்த நேரத்தில், இன்றைய தினம், “113 மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு 33 விண்ணப்பதாரர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்த பட்டியலை” சென்னை உயர்நீதிமன்றமே ரத்து செய்திருப்பது, கேடுகெட்ட அதிமுக ஆட்சியின் அவலட்சணங்களின் முத்தாய்ப்பாக விளங்குகிறது.DMK president M,K.Stalin warning to admk government
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 99 தேர்வர்கள் நிரந்தரமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி என்று மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வு முறைகேடு குறித்த விசாரணை மற்றும் கைதுகளைப் பார்க்கும்போது, இது ஏதோ ஒரு மையத்தில் நடைபெற்ற முறைகேடாகத் தெரியவில்லை; மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற “வியாபம்” ஊழலைவிட மோசமான “மெகா தேர்வு ஊழலுக்கு” தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் பணிபுரியும் ஒரு ரிக்கார்டு கிளார்க்தான் காரணம் என்பது போல், திமிங்கிலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சி செய்து, விசாரணையைத் திசை திருப்புவது திட்டமிட்ட, உள்நோக்கம் நிறைந்ததாகவே கருத வேண்டியதிருக்கிறது.

DMK president M,K.Stalin warning to admk government
தேர்வு மையத்தில் வினாத்தாள்கள் “சீல்” வைக்கப்பட்ட பிறகு, அதில் ஒரு “ரிக்கார்டு கிளார்க்” துணையுடன் அனைத்து முறைகேடுகளையும் செய்துவிட முடியும் என்றால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர், உறுப்பினர்கள், செயலாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எல்லாம் எதற்கு? ஆகவே இந்த முறைகேட்டின் “அதிகார மையத்தை” தப்பவைக்க அத்தனை முயற்சிகளும் நடைபெறுவதாகவே பொதுமக்கள் நினைக்கிறார்கள். ‘அழியும் மை கொண்ட பேனாவில் தேர்வு எழுதினார்கள்’, ‘வாகனத்தில் கொண்டு செல்லும் போது வினாத்தாள் திருத்தப்பட்டுள்ளது’ என்பதெல்லாம் சினிமாக்களில் வரும் கற்பனைக் கதைகளையும் மிஞ்சும் வகையில் இருக்கிறது. 
சிபிசிஐடி விசாரணை நடைபெறுகிற நேரத்தில், அதுவும் முறைகேடுகள் குறித்து செய்தி வெளிவந்து 25 நாட்களுக்குப் பிறகு பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய தினம் திடீரென்று ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இத்தனை நாள் அமைச்சர் எங்கே போயிருந்தார்? யாருக்காக “சூப்பர் ஸ்போக்ஸ் மேனாக”ப் பணியாற்றி, இந்த முறைகேடுகளைக் கண்டு கொள்ளாமல் அமைதி காத்தார்? இப்போது ஏன் தேர்வாணைய அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்?

DMK president M,K.Stalin warning to admk government
அது மட்டுமின்றி, சி.பி.சி.ஐ.டி விசாரணை முடியும் முன்பே, ஒரு தேர்வு மையத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வைத்து எப்படி அனைத்துத் தேர்வர்களின் முடிவையும் ரத்து செய்ய முடியும் என்று ஏன் கேள்வி கேட்கிறார்? அமைச்சர் ஜெயக்குமார் விசாரணையைத் திசைதிருப்பும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் எத்தகைய “வெளிப்படைத்தன்மை” கடைபிடிக்கப்பட்டது என்பதில் இந்த குரூப்-4 முறைகேடுகள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆக, ஏதோ ஒரு “ரிக்கார்டு கிளார்க்” மூலம்  ‘இமாலய’ தேர்வு முறைகேடு நடைபெற்று விட்டது என்று மூடி மறைக்காமல், அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட எத்தனை தேர்வுகளில் இப்படி அநியாயம், அக்கிரமம், முறைகேடு, மோசடி நடைபெற்றுள்ளது. அதன் ஆணி வேர் எங்கு இருக்கிறது என்பதைத் தீர விசாரிக்க வேண்டும்.DMK president M,K.Stalin warning to admk government
ஏற்கனவே உறுப்பினர்கள் நியமனத்தில் ‘ஆணையத்தை அதிமுகவின் தலைமைக் கழகமாக மாற்றி’ உச்ச நீதிமன்றம் வரை சென்று குட்டு வாங்கியது அதிமுக அரசு. இப்போது இந்த வெட்கங்கெட்ட முறைகேடு வேறு தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விபரீத விளையாட்டை இளைஞர்களின் எதிர்காலத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு நிகழ்த்தியிருக்கிறது. ஆகவே குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு, துறை அமைச்சர் ஜெயக்குமாரை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios