அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக்கொண்டார். குறைந்தபட்சம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதே கருத்தை திமுக கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தின.

 
ஆனால், தமிழக அரசு இதை காதில் வாங்கிகொள்ளவில்லை. “எதிர்க்கட்சிகளைக் கொண்டு கூட்டம் நடத்த ஒன்றும் இல்லை. நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள். இதில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த மறுப்பு தெரிவித்துவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவு மூலம் பதில் அளித்துள்ளார். “அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே. அதிமுக அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம்” என ட்விட்டர் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.