இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நூலிழையில் உயிர்தப்பி தமிழகம் திரும்பியுள்ளார் திமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ். 

திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ். தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக உழைத்த அவர் ஓய்வெடுக்க ஆசை பட்டுள்ளார். தேர்தல் முடிந்தவுடன் கடந்த 20-ம் தேதி 6 பேருடன் இலங்கை சென்றுள்ளார். அங்கு கிங்ஸ்பரி ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.

ஈஸ்டர் அன்று காலையில் டிபன் சாப்பிடுவதற்காக அறையிலிருந்து வெளியேறி இருக்கின்றனர். அப்போது சரியாக 8.45 மணிக்கு பயங்கர குண்டு வெடித்துள்ளது. ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதில் இந்த ஓட்டலும் ஒன்று.

இதனால் ஹோட்டல் கட்டிடமே அதிர்ந்துள்ளது. இதுகுறித்து செல்வராஜ் கூறும்போது "ஹோட்டலில் உள்ள நீச்சல் குளம் தண்ணீர் மேலே எழும்பி ஊற்றியதால் சுனாமிதான் வந்துவிட்டது என்று நினைத்தோம். கீழ்த்தளத்தில் மக்கள் அலறியடித்து நாலா புறமும் சிதறி ஓடினார்கள். எங்கே போறதுன்னே தெரியாமலும், அடுத்து என்ன நடக்கும்னும் தெரியாமல் 6 பேரும் பயத்திலேயே உறைந்து போய் இருந்தோம்.

பயந்து நடுங்கி இருந்தபோது ஓட்டல் ஊழியர்கள்தான் எங்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றார்கள். கவிஞர் வைரமுத்து போன் செய்து நிலைமையை விசாரித்தார். வேறு ஒருஇடத்தில் எங்களை தங்க வைத்தார்கள். எனக்கு ஜூரமே வந்துவிட்டது. அங்கேயே ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். நேற்று மதியம் கோயமுத்தூர் மண்ணை மிதித்த பிறகுதான் உயிரே வந்தது ‘’என்கிறார் செல்வராஜ்.