திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இதை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தினகரன் ஆதரவாளராக இருந்த செந்தில் பாலாஜி, பின்னர் திமுகவில் சேர்ந்தார். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், செந்தில்பாலாஜி மீது கடந்த 2017-ம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. 81 பேரிடம் ரூ. 1 கோடியே 62 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் பெற்று இருந்தார். இதற்கிடையே கடந்த மாதம் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலங்களில் திடீர் சோதனை அதிரடி சோதனை நடைபெற்றது. இதில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று அவர் கடந்த வாரம் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜரானார் அவரிடம் மோசடி பற்றி 6 மணிநேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி மோசடி தொடர்பான வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி. வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. உயர்நீதிமன்றம் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி சிறப்பு நீதிமன்றத்தால் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.