தெலங்கானாவில் கால்நடைகள் மீதும் அன்பு காட்டிய இளம் பெண் டாக்டரை மனித மிருகங்கள் நான்கு பேர் பாலியல் வன்புணர்வு செய்து, கொன்று, எரிக்கவும்செய்த அடுக்கமாட்டாத குரூரம் தேசத்தை மட்டுமல்ல சர்வதேசத்தையே அதிர வைத்துள்ளது. இந்தியாவெங்கிலும்  பெண் உரிமை உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டே உள்ளன.  இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் பற்றி எரிகிறது. ‘பாலியல்ன் குற்றங்களில் ஈடுபடுவோரை விசாரிப்பே இல்லாமல் விரைந்து தூக்கில் போட வேண்டும். நான்கு பேருக்கு இப்படி தண்டனை கொடுத்தால்தான் மற்ற எவனும் இதைச் செய்யும் துணிவில்லாமல் அடங்குவான்.’ என்று கொதிக்கின்றனர். ஆனால் ‘விசாரணையின்றி தூக்கிலிடுங்கள்! என்பது எமோஷனலான வாதம். சட்டப்படி விசாரித்து, குற்றம் நிரூபணமானால் விரைந்து கடும் தண்டனை வழங்கப்படும்.’  என்று அதிகார மட்டங்களின் பதில்கள் அவர்களை ஆசுவாசப்படுத்துகின்றன. 


ஆனாலும் சர்வ கட்சிகளின் எம்.பி.க்களும் இந்த விஷயத்தில் தொடர்ந்து போர்க்கொடி தூக்கிக் கொண்டு உள்ளனர். காங்கிரஸ் உறுப்பினரான உத்தம் குமார் சிங் “உறவினர்களை அழைத்ததற்கு பதிலாக போலீஸை அழைத்திருந்தால் அந்த டாக்டர் காப்பாற்றப்பட்டிருப்பார்! என தெலுங்கானா உள்துறை அமைச்சர்  கூறியது கண்டனத்துக்குரியது.” என்று வெளுத்திருக்கிறார். தி.மு.க.வின் உறுப்பினரான டி.ஆர்.பாலுவோ ”தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. டூ இன் ஒன் அரசாங்கம் போல உங்களது அரசுதான் தமிழகத்திலும் உள்ளது. ஒரேயொரு போன் கால் மூலம் இது போன்ற சம்பவங்களுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும்!” என்று அதிலும் அரசியல் பொடி வைத்துப் பேசியிருக்கிறார். திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினரான சவுகதா ராய் “தெலுங்கானா உள்துறை அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.” என கொதித்திருக்கிறார். 


ஆளும் பா.ஜ.க. அரசின் உறுப்பினரான  பந்திகுமார் “வெட்கக்கேடான செயல் இது. காலம் தாழ்த்தாமல் இதில் தண்டனை வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதில் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். லோக்சபாவில் இப்படி இவர்கள் போட்டு வெளுக்க, ராஜ்யசபா தி.மு.க. எம்.பி.யான வில்சன், அவையில் தன் பேச்சு குறித்து அளித்துள்ள உரை குறிப்பில் “பொள்ளாச்சி பாலியல் கொடுமை மற்றும் ஐதராபாத் டாக்டர் கொலை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன. நாட்டின் மகள்களை காப்பாற்ற வேண்டுமெனில் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதை போல, குற்றவாளிகளுக்கு மருத்துவ முறைகள் மூலம் விரை நீக்கம் செய்ய வேண்டும்.” என்று சொல்லியுள்ளார். 

தூக்கு தண்டனைக்கு எதிரான நிலைப்பாடுடையது தி.மு.க. எனவே அக்கட்சியானது பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விவகாரத்தில் வைக்கும் இந்த மூவ்வானது சக கட்சிகளை ஆச்சரியத்தில் அசர வைத்து, ‘இதுவும் சரிதானோ!’ என்று சிந்திக்க வைத்திருக்கிறது. 
ஆஹாங்!