தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் அறிக்கை திமுக - காங்கிரஸ் உறவில் விரிசலை அதிகப்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காமல் திமுக புறக்கணித்தது.


கடந்த 2013-ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகிய பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 2015-ல் மீண்டும் அணி சேர்ந்தன. கடந்த 5 ஆண்டுகளாக திமுக - காங்கிரஸ் உறவு மிகவும் வலுவாகவே இருந்துவருகிறது. திமுக - காங்கிரஸ் தலைமை மிக நெருக்கமாகவே இருந்துவருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்விலும், காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்களை திமுக, ஒதுக்கவில்லை என்ற மன வருத்தம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது.


 இதனால், அதிருப்தி அடைந்த, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் சட்டப்பேரவை குழு தலைவர் ராமசாமியும் தி.மு.க.,வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டனர். ‘திமுகவின் செயல் கூட்டணி தர்மத்துக்கு  விரோதமானது” என்ற வார்த்தையோடு வெளியிடப்பட்ட அறிக்கை திமுகவை அதிருப்திக்குள்ளாக்கிவிட்டது.  இதற்கு பதில் அளித்த முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், “இது ஆதங்கம்தானே தவிர மிரட்டல் அல்ல” என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு சங்கடங்கள் இருந்திருந்தால், நேரடியாகச் சந்தித்து பேசியிருக்கலாம். அல்லது தொலைபேசியில் தலைவருடன் பேசியிருக்கலாம். அதை விடுத்து அறிக்கை வெளியிட்டதை திமுக ரசிக்கவில்லை. இதுபற்றி திமுகவின் கோபம் அகில இந்திய  தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டது.


இதனையடுத்தே காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூட்டணி தொடர்பாக தெளிப்படுத்தினார். ஆனால், திமுக தலைமையின் கோபம் காரணமாக, அகில இந்திய காங்கிரஸ் நடத்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான கூட்டத்தைப் புறக்கணிப்பது என திமுக முடிவு செய்தது. கூட்டணிக்குள் பூதாகரம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுகவை சமாதானப்படுத்தும் விதமாக  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், “மதவாத, பாசிச சக்திகளின் கைப்பாவையாக செயல்படுவர்களுக்கு எதிராக திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் மேற்கொள்ளும் உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழக காங்கிரஸ் துணை நிற்கும்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழக தேர்தல் களத்தில் பல வெற்றிகளை குவித்துள்ளது. அந்த வெற்றியை தொடர, ஒற்றுமையுடன் இருப்போம். ஜனநாயகம் மற்றும் மக்கள் விரோத செயலில் ஈடுபடும் ஊழல் கட்சிகளை அம்பலப்படுத்தி, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என்று தெரிவித்திருந்தார். இதில் ‘ஒற்றுமை’ என்ற வார்த்தை திமுக கூட்டத்தைப் புறக்கணித்ததையொட்டிதான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த விவகாரத்துக்குக் காரனமான அழகிரியின் அறிக்கை, அகில இந்திய தலைமையின் ஒப்புதலின்றி வெளியிட்டிருக்கப்பட்டிருக்காது என்பதால் இக்கூட்டத்தைப் புறக்கணிப்பதில் திமுக உறுதியாக இருந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைமை நடத்திய கூட்டத்தில் பங்கேற்காமல் மம்தா, கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே ஆகியோர் புறக்கணித்தனர். திமுகவும் கூட்டத்தில் பங்கேற்காததால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.