ராஜ்ய சபா  தேர்தலில் ஒரு எம்.பி. பதவியை  தங்களுக்கு ஒதுக்கக்கோரி தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதிஷ் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்ய சபா எம்.பி.களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக தலா 3 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது. திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இதுவரை யாரும் அறிவிக்கப்படவில்லை. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தங்களுக்கு ஓரிடத்தைக் கேட்டு அதிமுகவை வலியுறுத்திஅருகிறது. ஆனால், தேமுதிகவுக்கு ஓரிடம் வழங்க நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒப்பந்தம் எதுவும் போடவில்லை என்று அதிமுக சார்பில் கருத்துகள் கூறப்பட்டுவருகின்றன.
என்றாலும், தேமுதிக தலைமை அதிமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இதுதொடர்பாக தேமுதிகவின் எல்.கே.சுதிஷ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை எல்.கே.சுதிஷ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது தங்களுக்கு ஓரிடம் வழங்க வேண்டும் என்று எல்.கே. சுதிஷ் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவிடமிருந்து ஓரிடத்தைப் பெற தேமுதிக விடாமல் அக்கட்சியைத் துரத்திவருகிறது.