துணை முதல்வர் ஒபிஎஸ் துறையில் ஊழல்..!! தனி ராஜ்ஜியம் நடத்தும் மதுரை வீட்டுவசதி வாரியம்.!!கோடிகளில் புரளும் AEக்கள்.!!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மதுரை பிரிவில் உள்ள அதிகாரிகள் பல்வேறு சர்ச்சைகளுடன் அரசியல்வாதிகள் மற்று உயர்அதிகாரிகள் மற்றும் அடியாட்களின் உதவியோடு ஊழல் வேட்டையாடி வருகின்றனர். இங்குள்ள ஒவ்வொரு அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் யாரு மீதும் எடுத்ததில்லை நிர்வாகம் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கு நடந்திருக்கும் ஊழல் முறைகேடுகள் குறித்து தமிழர் தேசியக் கழகத்தின் தலைவர் மு.க வையவன் பேசும் போது...

போலி சான்றிதழ்கள்:
 இங்கு பணிபுரியும் உதவிபொறியாளர்கள் 5பேர் போலியாக வெளிமாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பிஇ சான்றிதழ்கள் பெற்று பணியாற்றி வருகின்றனர். இவர்கள் எல்லாம் போலி சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அவர்களிடம் வாங்குவதை வாங்கிக்கொண்டு இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்களுக்கு பதவி உயர்வும் அளித்திருக்கிறார்கள்.தோட்டவேலைக்காரராக வேலைக்கு வந்தவர் நாகமுத்து நிர்வாகத்திற்கு கொடுத்த பத்தாம் வகுப்பு சான்றிதழ் போலியானது என தெரிந்தும் அவருக்கு பதவிஉயர்வு கொடுத்து அழகு பார்த்தார்கள் மதுரை வீட்டுவசதி வாரிய அதிகாரிகள்.இவருக்கு இளநிலை உதவியாளருக்கான சம்பளம் வழங்கியது வாரியத்திற்கு இழப்பீடு. இவரைப் போன்றே அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது? ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மர்மமாகவே உள்ளது.

மராமத்துப்பணிகளில் ஊழல்:

மதுரை சொக்கிகுளம். ரேஸ்கோர்ஸ், டிஆர்ஒ காலணி ஆகிய பகுதிகளில் கடந்த 10ஆண்டுகளில் மட்டும் பலகோடி ரூபாய்க்கு மராமத்துப்பணிக்கான வேலைகள் நடந்து முடிந்திருக்கிறது.இதில் எந்த வீடுகளிலும் திட்டஅறிக்கையில் சொல்லியது போல் மராமத்து வேலைகள் செய்யவில்லை.அதற்கு மாறாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் தரமில்லாத பெயிண்ட்களை கொண்டு வெளிப்பகுதியில் பளிச்சென்று கலர்கலராக பெயிண்ட் அடித்து அதை போட்டோ எடுத்து மேல்அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் பொறியாளர்கள். மராமத்து பணியின் போது ஒரு வீட்டில் இருக்கும் அனைத்து ரிப்பேர்களையும் சரி செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் ஒருசில வீடுகளை தவிர மற்ற எல்லா வீடுகளுக்கும் வெளிப்பகுதியில் மட்டும் பெயிண்ட் அடித்து விட்டு கணக்கு முடித்துக்கொள்ளுவது பொறியாளர்களின் ஸ்டைல்.இதன் மூலம் அந்த பகுதியில் பொறுப்பில் இருக்கு பொறியாளர்களுக்கு பல லட்சம் லஞ்சம் பெறுவது தனி ஸ்டைல்..இந்த வேலைகளுக்கு குடியிருக்கும் நலச்சங்கத்திடம் நல்லமுறையில் வேலை செய்திருக்கிறார்கள் என்று ஒரு கடிதம் வாங்கியிருக்கிறார்கள் அதிகாரிகள். அதிகாரிகள் ஊழல் செய்வதற்காகவே ஒரு ஒப்பந்ததாரர் நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள் இங்கேயுள்ள பொறியாளர்கள். 3மாதத்திற்கு ஒரு முறை மராமத்துப் பணிகள் செய்ய வேண்டும்.அதற்காக கிருஷ்ணசாமி என்கிற ஒப்பந்ததாரரை வைத்துக்கொண்டு வேலையை செய்யாத வீடுகளில் வேலை செய்ததாக "எம்புக்" measurement எழுதி பொறியாளர்கள் தங்களது வீட்டிற்கு தேவையான வேலைகளை செய்து முடித்திருக்கிறார்கள். இதன் மூலம் பலகோடி சுரண்டப்பட்டிருக்கிறது. வீட்டு வசதி வாரிய பொறியாளர்கள் நீதிமன்ற வழிகாட்டுதலோடு ஒரு குழு அமைத்து அவர்களின் ஊழல்களை கண்டு பிடித்து கடிவாளம் போட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


 
ஒப்பந்த தொழிலாளர்கள் பெயரில் ஊழல்: மதுரை வீட்டுவசதி வாரியம் மதுரை பிரிவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்க அரசிடம் இருந்து எந்த ஒப்புதலும் இல்லை. ஆனால் இங்குள்ள அதிகாரிகள், தொழிலாளர்கள் இல்லாமலேயே பணியில் இருப்பது போன்று போலியாக வவுச்சர் எழுதி ஒவ்வொரு மாதமும் பல லட்சம் வாரியத்திற்கு இழப்பீடு செய்தும் அவர்கள் பாக்கெட்டை நிரப்பியும் வருகிறார்கள். இதுசம்மந்தமாக தொழிற்சங்கம் நிர்வாகிகள் மேல் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் புகார் வாசிக்கிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்கள் யாருக்கும் மாதம் எவ்வளவு சம்பளம் என்பது இதுவரைக்கும் தெரியாது. காரணம் எந்த ஒப்பந்த தொழிலாளர்களிடமும் வவுச்சரில் கையெழுத்து வாங்குவது கிடையாது.அவர்கள் வங்கி கணக்கில் சம்பளம் பரிமாற்றம் செய்தால் இதுபோன்ற ஊழல்கள் வெளிவந்து விடும் என்பதற்காக இதில் எதுவுமே கடைப்பிடிக்கப்படுவதில்லை. மதுரையில் இதன் மூலம் மட்டும் ஒவ்வொரு மாதமும் வீட்டு வசதிவாரியத்துக்கான பல லட்சம் பணம் வீணடிக்கப்படுகிறது.

வீணடிக்கப்பட்ட வீட்டுவசதி வாரியப்பணம்: 
திண்டுக்கல் சின்னாளப்பட்டி 156 வீடுகள், மதுரை வில்லாபுரம் 116 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், அவனியாபுரம், பழங்காந்தம் பைபாஸ் ரோட்டில் கட்டப்பட்ட 104 வீடுகள்.மதுரை மாநகராட்சியில்  ஆனையூர், சிலையனேரி, விளாங்குடி ஆகிய திட்டங்களில் வாரியத்திற்கு பெரிய அளவில் இழப்பீடு ஏற்படுத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள். தேனி மாவட்டம் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் சுமார் 300 கோடி அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.மேற்கண்ட பகுதிகளில் எப்படியெல்லாம் ஊழல் நடைபெற்றது என்பதை பிறகு பார்க்கலாம். இந்த இழப்பீடு மூலம் பொறியாளர்கள் பெற்ற பணம் யாருக்கு போனது என்கிற கேள்விக்குபதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை ஊழல் மற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நேர்மையாக விசாரணை நடத்தினால் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும். மதுரை அண்ணாநகரில் அம்மா கல்யாண மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் அதை தனியாருக்கு ஏலம் விடும் முயற்சி நடந்தது. இந்த மண்டபத்தை 1கோடிக்கு ஏலம் எடுக்க கூட யாரும் ஆட்கள் வரவில்லை.தரமற்ற நிலையில் மண்டபம் இருப்பதால் யாரும் ஏல எடுக்க வரப்பயப்படுகிறார்கள். இதே போன்று தான் துணை முதல்வர் சொந்த மாவட்டமான தேனியிலும் வேலைகள் நடப்பதாக சொல்லுகிறார்கள்.டிஆர்ஓ காலணியில் இடிக்கப்பட்ட வீடுகளில் தரை தளத்தில் இருந்த ஆற்றுமணலை எடுத்து ஒரு லோடு 30ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்து அதில் பல லட்சம் சம்பாதித்திருக்கிறார் இங்குள்ள உதவிபொறியாளர். 

பொறியாளர் பிரிவில் பணியாற்றும் பொறியாளர்கள் மதுரையில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கிறார்கள். 3ஆண்டுகளுக்கு ஒரு முறை பணிஇடமாற்றம் செய்ய வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால் இங்கே அதுபோன்று எதுவுமே கடந்த 8ஆண்டுகளாக நடைபெறவில்லை.இங்கே பணியாற்றிக்கொண்டே பதவி உயர்வு பெற்று, பணி ஓய்வு பெறும் அளவிற்கு செல்வாக்கு பெற்ற அதிகாரிகளாகவே வலம் வருகிறார்ள்.. காரணம் சென்னையில் இருந்து மதுரை வரும் உயர் அதிகாரிகளை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில், கொடைக்கானால் அழைத்து செல்வதும் அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் ஏற்பாடுகளை செய்து கொடுத்து அவர்களை குளிர்வித்து மகிழ்வித்து அனுப்புவதால் யாரும் எந்த மாவட்டத்திற்கு மாற்றப்படுவது இல்லை. அதிகாரிகளை கவனிப்பதற்காகவே மதுரை அலுவலகத்தில் ஒரு சில பொறியாளர்கள் இருக்கிறார்கள்.

வீட்டுவசதி வாரியம் மேலாண்மை இயக்குனர் நேரடி பார்வையில் தனிக்குழு அமைத்து மதுரையில் ஆய்வு நடத்துவதோடு நிதி செலவினங்களையும் தனியாக தணிக்கையாளர் டீம் கொண்டு ஆய்வு நடத்தினால் இதுவரை வாரியத்திற்கு எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டு பிடிக்க முடியும். வேலைக்கு வரும் போது ஓட்டை சைக்கிளில் வந்த பொறியாளர்கள் இன்று ஆடி காரில் வரும் அளவிற்கு பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட அதிகாரிகளிடம் வாரியப்பணத்தை வாரிசுருட்டியவர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது. இந்த துறைக்கு துணை முதல்வர் ஒபிஎஸ் அமைச்சராக இருக்கிறார். இவர் பெயரை பயன்படுத்தி நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது தேர்தல் நிதியென்று கோடிரூபாய் வசூல் செய்து ஆட்டைய போட்டதும் இங்கேதான்.

ஒவ்வொரு அதிகாரிகளும் கார், வீடு, இடம், தோட்டம், தோப்பு என பினாமிகள் பெயரில் சொத்துப்பட்டியல் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது. இதை லஞ்ச ஒழிப்பு துறை, வருமானவரித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. வீடு வாடகைக்கு பெற அரசு ஊழியர்கள் விண்ணப்பம் செய்தால் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை உதவியாளருக்கு சில ஆயிரம் செலவு செய்தால் மட்டுமே வாடகைக்கு வீடு கிடைக்கும். இந்த ஒதுக்கீட்டில் நடக்கும் அநியாயம் அனைத்து அரசு ஊழியர்கள் முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்அதிகாரிகள் வரைக்கும் நன்கு தெரிந்ததே.புகார் அளிப்பவர்களையும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் கேள்வி கேட்பவர்களையும் அடிஆட்களை வைத்து மிரட்டும் சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது என்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஸ்டாலின்.

 எந்த பொறியாளர்கள் கட்டிடம் கட்டுவதில் எப்படி ஊழல் செய்கிறார்கள் செய்திருக்கிறார்கள். அதில் யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் ஏன் இந்த முறைகேடு நடக்கிறது. மற்ற மாவட்டங்களில் தனி பிளாட் போட்டு விற்பனை செய்ததில் நடந்த ஊழல் மற்றும் மதுரை வீட்டு  வாரியத்தில் புதைந்து கிடக்கும் வெளிவாராத தகவல்களோடு அடுத்த பதிவில் வாசகர்களை சந்திக்கிறோம்.