கொரோனா எதிரொலியாக  நாட்டில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வெகுவாக குறைந்துள்ளதாக டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் .  மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 376 இன் கீழ் வெறும் 23 பாலியல் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர் .  கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது ,  இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன், பொதுவாக அனைத்து வகையாக குற்றங்களும் வெகுவாக குறைந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி முதல்,  ஏப்ரல் 12ம் தேதி வரையில் மட்டும் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகள்,  அதாவது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 376 பிரிவின் கீழ் - சுமார் 139 வழக்குகள் பதிவாகி இருந்தது ,   ஆனால் தற்போது ஊரடங்கு  நடைமுறையில் உள்ள நிலையில்  மார்ச் 22 முதல் ஏப்ரல் 12 வரையில்  பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கு வெறும் 23 ஆக பதிவாகியுள்ளது .  ஆகவே கடந்த ஆண்டை ஒப்பிடுகையில்  பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளில் 83. 4% அளவுக்கு குறைந்துள்ளது. 

அதேபோல் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதாவது பெண்களை தாக்குதல் ,  பெண்களை  பலவந்த படுத்துதல் , அவர்களை கேலி கிண்டல் செய்தல், சீண்டுதல்,   போன்ற பெண்களுக்கு எதிரான துன்புறுத்துதல் வழக்குகள்  கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 22 முதல்  ஏப்ரல்12ஆம் தேதி வரை சுமார் 233 வழக்குகள் பதிவாகி உள்ளன,  ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்துவரும் நிலையில்  இந்தாண்டுக்கான அதே காலகட்டத்தில் வெறும் 33 ஆக பதிவாகி உள்ளது.  ஆகவே கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள்  85. 8 சதவீதம் குறைந்துள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர் .

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் குறைந்ததற்கான காரணம் குறித்தும் டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர் , ஆதாவது  ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் மக்கள் அதிகம் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது , பெண்களை ஆண்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள்  குறைந்துள்ளது. அதேபோல் குற்றம் நடைபெறுவதற்கான சூழல்களும் அறவே இல்லாமல் போயுள்ளது.  அதேபோல்,  போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் சாலைகளில் நிகழும்  குற்றங்கள்  முற்றிலுமாக தடைபட்டுள்ளது ,  குறிப்பாக சாலை விபத்துகள் குறைந்துள்ளன,  அதேபோல்  பொதுப் போக்குவரத்துக்களான  பேருந்து ,  மெட்ரோ  ரயில்,  ஆகிய போக்குவரத்துக்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களுக்கு எதிராக நடந்து வந்த சீண்டல், சில்மிஷங்கள் .  போன்ற  குற்றங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது .

மதுபான கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது ,  இதனால் மது அருந்துபவர்களால் ஏற்படும்  குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது , சமூக விலகல் எந்த அளவுக்கு கடைபிடிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு குற்றங்களும் குறைந்துள்ளன .  இந்நிலையில் கடந்த 15 நாட்களை (மார்ச் 15 முதல் மார்ச் 31 வரை) கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒப்பிடுகையில் அனைத்து வகையான குற்றங்களும் கணிசமாக குறைந்துள்ளன ,  அதாவது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் வழக்கு 144 இலிருந்து 72 ஆக குறைந்துள்ளது ,  109 ஆக இருந்த கொள்ளை வழக்குகள் 53 ஆக குறைந்துள்ளது.  வழிப்பறி குற்றங்கள் 13 லிருந்து 3 ஆக் குறைந்துள்ளது.  1982 ஆக இருந்த  திருட்டு வழக்குகள்  1743 ஆகவும் குறைந்துள்ளது .  அதேபோல் ஆண்கள் மற்றும் பெண்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் குடும்ப வன்முறைகள் ஏதும் அதிகரிக்கவில்லை என டெல்லி மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.