தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர்  கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஆனால் அப்போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அதுவும் தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை.

27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் சரிசமமாக  வெற்றி பெற்றன. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. ஆளுங்கட்சியினர் இந்த தேர்தல்களை நடத்துவார்களா ? என்று எதிர்கட்சியினர் சந்தேகம் எழுப்பி இருந்தனர்.

இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தலை நடத்த, ஆளும் கட்சி தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும், 27 ஆம்  தேதி, அதற்கான தேதியை, மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க., தரப்பில், கூட்டணி கட்சிகளுடன், நகராட்சிகள், மாநகராட்சிகளில், வார்டுகளை பங்கீடு செய்வது குறித்து, ரகசிய பேச்சு நடைபெற்று வருவதாக தெரிகிறது,