கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்களவையை ஏப்ரல் மாதம் 3-வது வாரம் வரை தள்ளி வைக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் 73 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் திருமாவளவன் மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, திருமாவளவன் நேற்று நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து முன்வைத்த கோரிக்கைகளில், கோவிட் 19 வைரஸ் பரிசோதனை கருவி நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட வேண்டும். முகக்கவசம் மற்றும் கைகளை சுத்தம் செய்யக்கூடிய மருந்து, மக்களவை உறுப்பினர்களுக்கும் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து சுற்றறிக்கை வெளியிட வேண்டும். கரோனா பற்றி விழிப்புணர்வு கையேடு வழங்க வேண்டும்.
மக்களவையை ஏப்ரல் மாதம் 3-வது வாரம் வரை தள்ளி வைக்க வேண்டும்’’ஆகிய கோரிக்கைகளை திருமாவளவன் முன்வைத்தார்.